குன்றத்தூரில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் நடமாடும் ஏ.டி.எம். செயல்பாட்டுக்கு வந்தது


குன்றத்தூரில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் நடமாடும் ஏ.டி.எம். செயல்பாட்டுக்கு வந்தது
x
தினத்தந்தி 5 May 2020 4:15 AM IST (Updated: 5 May 2020 4:00 AM IST)
t-max-icont-min-icon

குன்றத்தூரில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் நடமாடும் ஏ.டி.எம். செயல்பாட்டுக்கு வந்தது.

பூந்தமல்லி, 


காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18-ஆக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக தடுப்புகள் அமைத்து பொதுமக்கள் யாரும் வெளியே வராத வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அங்கு வசிக்கும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் இருப்பதால் மக்கள் தங்களின் அத்தியாவசிய பொருட்களை வாங்க பணத்துக்கு என்ன செய்வதென்று தெரியாமல் அவதிப்பட்டு வந்தனர்.

நடமாடும் ஏ.டி.எம்.

இதனால் குன்றத்தூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நடமாடும் ஏ.டி.எம். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பொதுமக்கள் அதிக அளவில் கூடாமல் இருக்கும் வகையில் அவரவர் வீட்டு வாசலின் முன்பு ஏ.டி.எம். வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டது. பொதுமக்கள் அங்கு வந்து பணத்தை எடுத்து கொண்டனர்.

மேலும் அவர்களுக்கு வேண்டிய அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.

சில இடங்களில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் குன்றத்தூர் பகுதியில் முழு ஊரடங்கு தொடர்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story