பல்லாவரம் நகராட்சியில் அரசு டாக்டருக்கு கொரோனா பாதிப்பு


பல்லாவரம் நகராட்சியில் அரசு டாக்டருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 5 May 2020 4:04 AM IST (Updated: 5 May 2020 4:04 AM IST)
t-max-icont-min-icon

பல்லாவரம் நகராட்சி பகுதியில் அரசு டாக்டருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

தாம்பரம், 

சென்னையை அடுத்த பல்லாவரம் நகராட்சிக்கு உட்பட்ட கீழ்கட்டளை தேன்மொழி நகர் பகுதியில் 32 வயதான டாக்டர், குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர், கே.கே. நகரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக உள்ளார். இவருடைய மனைவியும் டாக்டர். இந்தநிலையில் அரசு டாக்டருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதியானது. அவர், சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து அந்த பகுதியில் பல்லாவரம் சுகாதார அலுவலர் கோவிந்தராஜ் தலைமையில் சுகாதார பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்து அந்த பகுதியில் இருந்த ரேஷன் கடையையும் மூடினர். இந்த பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பல்லாவரம் நகராட்சியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

கோவிலம்பாக்கம்

இதுதவிர கோவிலம்பாக்கத்தில் கார் டிரைவர் ஒருவருக்கும், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா உறுதியானது. கூடுவாஞ்சேரியை அடுத்த வல்லாஞ்சேரி பகுதியை சேர்ந்த 52 வயதான ஒருவர், சென்னை துறைமுகத்தில் ஒப்பந்ததாரராக உள்ளார். கடந்த சில நாட்களாக வடசென்னைக்கு சென்று வந்த அவர், ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்ததில் கொரோனா உறுதியானது. உடனடியாக அவர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் மூலம் மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 97 ஆனது.


Next Story