உற்பத்தியும் இல்லை; விற்பனையும் இல்லை: தேங்கிக்கிடக்கும் 30 லட்சம் பாக்கு மட்டை தட்டுகள்


உற்பத்தியும் இல்லை; விற்பனையும் இல்லை: தேங்கிக்கிடக்கும் 30 லட்சம் பாக்கு மட்டை தட்டுகள்
x
தினத்தந்தி 5 May 2020 4:21 AM IST (Updated: 5 May 2020 4:21 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கால் தஞ்சை மாவட்டத்தில் 30 லட்சம் பாக்குமட்டை தட்டுகள் தேங்கிக்கிடக்கிறது.

தஞ்சாவூர்,

ஊரடங்கால் தஞ்சை மாவட்டத்தில் 30 லட்சம் பாக்குமட்டை தட்டுகள் தேங்கிக்கிடக்கிறது.

ஊரடங்கு உத்தரவு

கொரோனா வைரஸ் பரவுதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக வருகிற 17-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் அமலில் இருந்து வருகின்றன. நேற்றுடன் 41 நாட்கள் முடிவடைந்து விட்டன.

மக்கள் அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர அனுமதிக்கப்படுகின்றனர். அதற்கும் 3 வண்ண அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அதையும் மீறி தேவை இல்லாமல் வெளியே வருபவர்கள மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

தொழில்கள் பாதிப்பு

இந்த ஊரடங்கு காரணமாக அனைத்து தொழில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இது தவிர தொழிலாளர்களும் வேலை இழந்து தவித்து வருகிறார்கள். இந்த ஊரடங்கு காரணமாக தஞ்சை மாவட்டத்தில் தயாரிக்கப்பட்டு வரும் பாக்கு மட்டை தட்டுகள் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளன.

தஞ்சை மாநகரில் 10 இடங்களிலும், மாவட்டம் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் பாக்குமட்டை தட்டுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இந்த தட்டுகள் வட்டம், சதுரம், பாக்ஸ், டீ கப், ஸ்பூன் ஆகிய வடிவங்களில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இவை ஒவ்வொன்றிலும் சிறியது முதல் பெரியது வரை 4 விதமாக தயார் செய்யப்பட்டு வருகின்றன.

சுப நிகழ்ச்சிகள் ரத்து

இந்த தட்டுகள் திருமண நிகழ்ச்சிகள், கோவில் நிகழ்ச்சிகள், வீடுகளில் நடைபெறும் பல்வேறு சுப நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் ஊரடங்கு காரணமாக திருமணம் உள்ளிட்ட பல்வேறு சுப நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு விட்டன. சில திருமணங்கள் குறைந்த அளவிலான உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்று வருகின்றன.

கோவில் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இதனால் பாக்குமட்டை தட்டுகள் விற்பனை அடியோடு பாதிக்கப்பட்டு விட்டது. ஒவ்வொரு உற்பத்தி நிலையங்களிலும் தலா 1 லட்சம் தட்டுகள் தேக்கம் அடைந்துள்ளன. இதன் மூலம் தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 30 லட்சம் தட்டுகள் தேக்கம் அடைந்துள்ளன.

பாக்கு மட்டைகள் தேக்கம்

மேலும் உற்பத்தி நடைபெறாததால் ஒவ்வொரு உற்பத்தி நிறுவனத்திலும் ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான பாக்குமட்டைகளும் கொள்முதல் செய்யப்பட்டு தேங்கிக்கிடக்கின்றன. இந்த மட்டைகள் மழையில் நனையாத வாறு பாதுகாப்பாக வைக்கவேண்டும் என்பதால் அதையும் பத்திரப்படுத்தி பாதுகாத்து வருகின்றன.

மேலும் பாக்குமட்டை தட்டுகள் உற்பத்தி செய்யும் எந்திரங்களும் கடந்த 41 நாட்களாக பயன்படுத்தப்படாமல் உள்ளது. ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட தட்டுகள் தேக்கம் அடைந்ததால் மீண்டும் உற்பத்தி செய்யப்படவில்லை. இனி ஊரடங்கு முடிந்து வேலை தொடங்கும் முன்பு எந்திரங்களை சரிபார்ப்பதற்கு ரூ.1 லட்சம் வரையிலும் செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது.

2 மாதங்கள் ஆகும்

இது குறித்து தஞ்சையில் பாக்குமட்டை உற்பத்தி செய்து வரும் காலித்அகமது கூறுகையில், “ஊரடங்கால் பாக்குமட்டை தட்டுகள் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நிறுவனங்களிலும் 5-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர். இதனால் 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். ஒரு தட்டின் குறைந்தபட்ச விலை ரூ.1. அதிகபட்ச விலை ரூ.10 ஆகும். நாங்களும் உற்பத்தி செய்த தட்டுகளை விற்பனை செய்தால் தான் அடுத்த கட்ட பணிகளை தொடங்க முடியும். விற்பனை ஆகாததால் சிலர் கடனை கட்ட முடியாமல் உள்ளனர்.

மேலும் ஊரடங்கு முடிந்த பின்னரும், பொதுமக்கள் சகஜ நிலைக்கு திரும்பிய பின்னர் தான் சுப நிகழ்ச்சிகளை மேற்கொள்வர். அதற்கு குறைந்தபட்சம் 2 மாதங்களுக்கு மேல் ஆகும். அதுவரை எங்களின் தொழிலுக்கு பெரும் பாதிப்பு தான். மேலும் எங்களைப்போன்ற பல சிறு, குறு தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே சிறு, குறு தொழில்கள் மேம்பட உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் அவர்களுக்கு கடனுதவி கிடைக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும்”என்றார்.


Next Story