சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட வில்லை: ஊரடங்கு கட்டுப்பாடு தளர்வால் பெரும்பாலான கடைகள் திறப்பு


சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட வில்லை: ஊரடங்கு கட்டுப்பாடு தளர்வால் பெரும்பாலான கடைகள் திறப்பு
x
தினத்தந்தி 5 May 2020 4:27 AM IST (Updated: 5 May 2020 4:27 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு கட்டுப்பாடு தளர்வால் தஞ்சையில் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன. இதனால் மக்கள் நடமாட்டமும் அதிகரித்து காணப்பட்டது.

தஞ்சாவூர்,

ஊரடங்கு கட்டுப்பாடு தளர்வால் தஞ்சையில் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன. இதனால் மக்கள் நடமாட்டமும் அதிகரித்து காணப்பட்டது. ஆட்டோக்களும் இயங்கின. பல கடைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட வில்லை.

கொரோனா வைரஸ்

சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் இன்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிக அளவில் உள்ளது. இந்த கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த ஊரடங்கு வருகிற 17-ந்தேதி வரை அமலில் உள்ளது. ஊரடங்கு காலத்தில் மக்கள் அத்தியாவசிய தேவைக்காக காய்கறி, மளிகை, மருந்து வாங்க மட்டும் அனுமதிக்கப்பட்டனர். அதுவும் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே திறந்திருந்தன. பொதுமக்கள் வெளியே வருவதற்கு பச்சை, நீலம் மற்றும் ரோஸ் நிறத்தினால் ஆன அடையாள அட்டை வழங்கப்பட்டது. இந்த அட்டையை வாரத்துக்கு 2 நாட்கள் மட்டுமே பயன்படுத்த மக்கள் அனுமதிக்கப்பட்டனர்.

வழக்குப்பதிவு

அதையும் மீறி வந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாட்டில் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது. அதன்படி 40 நாட்களுக்குப்பிறகு கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், செல்போன், கம்ப்யூட்டர் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் பழுது நீக்கும் கடைகள், கிராமப்புறங்களில் உள்ள கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டன. உணவகங்களும் சில கட்டுப்பாடுகளுடன் திறக்க அனுமதிக்கப்பட்டன. மேலும் கடைகள் திறப்பு நேரத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டன.

அதன்படி தஞ்சை மாவட்டத்தில் நேற்று பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. எலக்ட்ரீக்கல் கடைகள், கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. துணிக்கடைகள், நகைக்கடைகள் போன்றவை திறக்கப்படவில்லை.

மக்கள் நடமாட்டம் அதிகரிப்பு

நேற்று பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டு இருந்ததால் மக்கள் நடமாட்டமும் அதிகமாக காணப்பட்டது. சாலைகளில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் பயன்பாடும் அதிகமாக காணப்பட்டது. தஞ்சை கீழவாசல், தெற்கு அலங்கம், கீழராஜவீதி, மேலவீதி, தெற்கு வீதி, மருத்துவக்கல்லூரி சாலை, காந்திஜி சாலைகளிலும் மக்கள் நடமாட்டம் அதிக அளவில் காணப்பட்டது. கடைகள் அதிகம் நிறைந்த கீழவாசல் பகுதிகளில் சாதாரண நாட்களில் காணப்படும் கூட்டம் போல காணப்பட்டது.

மேலும் தஞ்சை மாநகரில் பல்வேறு பகுதிகளில் ஆட்டோக்கள் இயங்குவதை காண முடிந்தது. ஊரடங்கு கட்டுப்பாடு தளர்வு செய்யப்பட்டதையடுத்து தஞ்சை மாநகரில் பல்வேறு பகுதிகளில் இடங்களில் சாலைகளில் ஏற்படுத்தப்பட்டு இருந்த தடுப்புகளும் அப்புறப்படுத்தப்பட்டன. போலீசாரும் ரோந்து வந்து மக்களுக்கு எச்சரிக்கை செய்து கொண்டே இருந்தனர். மேலும் பொதுமக்கள் முககவசம் அணிந்து செல்லுமாறும், கடைகளில் சமூக விலகலை கடைபிடிக்குமாறு வலியுறுத்தினர்.

சமூக இடைவெளி இல்லை

கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் பெரும்பாலான கடைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை. மக்கள் எப்போதும் போலவே நெருக்கமாக காணப்பட்டனர். சிலர் முககவசம் கூட அணியாமல் வந்தனர். தஞ்சை தெற்கு வீதி, கீழவாசல், பர்மாபஜார் உள்ளிட்ட பகுதிகளில் கடைகளும்நெருக்கமாக உள்ளதால் மக்கள் இடைவெளி விட்டு நிற்பதற்கு இடமும் இல்லை. இதனால் மக்கள் சமூக இடைவெளி இல்லாமல் நின்று பொருட்களை வாங்கினர். இந்த நிலைமை தொடர்ந்தால் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று மக்கள் அச்சத்துடன் கூறினர்.

Next Story