கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட 10 ஊர்களில் ஊரடங்கு தளர்வு இல்லை: சென்னையில் இருந்து வந்த 280 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு
தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ள 10 ஊர்களுக்கு ஊரடங்கிலிருந்து தளர்வு இல்லை.
தஞ்சாவூர்,
தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ள 10 ஊர்களுக்கு ஊரடங்கிலிருந்து தளர்வு இல்லை. மேலும் சென்னையில் இருந்து வந்த 280 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்று கலெக்டர் கூறினார்.
கலெக்டர் பேட்டி
தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட அதிராம்பட்டினம், திருவையாறு, பாபநாசம், அம்மாப்பேட்டை, கும்பகோணம், நெய்வாசல், சேதுபாவாசத்திரம், கபிஸ்தலம், வல்லம், தஞ்சை சுந்தரம் நகர் உள்ளிட்ட 10 ஊர்களை சேர்ந்தவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், அந்த பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக கண்காணிக்கப்பட்டு அங்கு முழு ஊரடங்கு உத்தரவு வருகிற 17-ந் தேதி வரை அமல்படுத்தப்படுகிறது.
280 பேர் கண்காணிப்பு
மாவட்டத்தின் பிற பகுதிகளில் அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதல்களின் படி ஊரடங்கிலிருந்து சில தளர்வுகள் தளர்த்தப்படுகிறது. ஆனாலும் பொதுமக்கள் சமூக இடைவெளியை அவசியம் கடைபிடிக்க வேண்டும். சென்னையிலிருந்து தஞ்சைக்கு வந்த 280 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 58 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆகவும் உயர்ந்துள்ளது.
குணமடைந்து வீட்டுக்கு செல்வோர் அவரவர் வீடுகளில் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடும் நடவடிக்கை
முன்னதாக கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு உத்தரவு வருகிற 17-ந்தேதி நள்ளிரவு 12 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட சீல்வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி எவ்விதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.
சீல்வைக்கப்பட்ட பகுதிகளை தவிர்த்து இதர பகுதிகளில் கட்டுமான தொழிலாளர்கள் இருக்கும்பட்சத்தில் கட்டுமானப்பணிகள் அனுமதிக்கப்படும். அனைத்து அச்சகங்களும் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் மட்டும் வழங்க அனுமதிக்கப்படும். ஊரடங்கு உத்தரவு தொடர்வதால், பொது இடங்களில் 5 நபர்களுக்கு மேல் கூடக்கூடாது. மத்திய அரசு மற்றும் மாநில அரசு அலுவலகங்கள் 33 சதவீத பணியாளர்களுடன் தொடர்ந்து செயல்படலாம். (பதிவுத்துறை அலுவலகங்கள் உட்பட) மேலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத வணிக நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு சீல் வைக்கப்படும். அரசு வழங்கியுள்ள இந்த நடைமுறைகளைப் பின்பற்றி தொழிற்சாலைகளுக்கு தக்க அனுமதி வழங்கி நாளை (புதன்கிழமை) முதல் செயல்பட அனுமதிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story