அரசு பஸ்களில் இலவச பயண சலுகை மேலும் 2 நாட்கள் நீட்டிப்பு - முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு


அரசு பஸ்களில் இலவச பயண சலுகை மேலும் 2 நாட்கள் நீட்டிப்பு - முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு
x
தினத்தந்தி 5 May 2020 5:55 AM IST (Updated: 5 May 2020 5:55 AM IST)
t-max-icont-min-icon

வெளிமாவட்ட தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்ப அரசு பஸ்களில் இலவச பயணம் செய்யும் கால அவகாசத்தை மேலும் 2 நாட்கள் நீட்டித்து முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.

பெங்களூரு,

முதல்-மந்திரி எடியூரப்பா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

“பெங்களூருவில் சிக்கியிருக்கும் வெளிமாவட்ட தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பஸ்களில் 3 நாட்கள் இலவசமாக பயணம் செய்து தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்லலாம் என்று நான் கூறியிருந்தேன். 

தற்போது இந்த இலவச பயண காலத்தை மேலும் 2 நாட்கள் நீட்டித்துள்ளேன். அதன்படி தொழிலாளர்கள் வருகிற 7-ந் தேதி வரை கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ்களில் இலவசமாக பயணம் செய்து தங்களது சொந்த ஊருக்கு செல்லலாம்.

தொழிலாளர்கள் தனி மனித இடைவெளியை தவறாமல் பின்பற்ற வேண்டும். இது மட்டுமின்றி முக கவசம் அணிவது உள்ளிட்ட பிற விதிகளையும் கடைபிடிக்க வேண்டும். நேற்று முன்தினம் 951 பஸ்கள் இயக்கப்பட்டன. இதன் மூலம் 30 ஆயிரம் பேர் சொந்த ஊருக்கு சென்றனர். இன்று(நேற்று) பெங்களூருவில் இருந்து மட்டும் 550 பஸ்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன. மாநிலத்தின் பிற நகரங்களில் இருந்து 400 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

கடந்த 2-ந் தேதி 550 பஸ்கள் இயக்கப்பட்டு 16 ஆயிரத்து 500 பேர் சொந்த ஊர்களுக்கு போய் சேர்ந்தனர்.

தொழிலாளர்களுக்கு உணவு

பீகார் மாநிலம் பாட்னாவுக்கு 2 ரெயில்களும், ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி மற்றும் ஒடிசா மாநிலம் புவனேஸ்வருக்கு தலா ஒரு ரெயில் என மொத்தம் 4 ரெயில்கள் நேற்று முன்தினம் இயக்கப்பட்டன. இதில் 4,500 தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊருக்கு சென்றனர். மேலும் நேற்று 2 ரெயில்கள் ராஜஸ்தான் மற்றும் பீகாருக்கு சென்றன. தொழிலாளர்களுக்கு உணவு பொட்டலம், குடிநீர் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்பட்டன.”

இவ்வாறு எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

Next Story