இதுவரை 13 பேர் வீடு திரும்பி உள்ளனர் குமரியில் மேலும் 3 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்


இதுவரை 13 பேர் வீடு திரும்பி உள்ளனர் குமரியில் மேலும் 3 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்
x
தினத்தந்தி 5 May 2020 6:42 AM IST (Updated: 5 May 2020 6:42 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் 3 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். அந்த வகையில் இதுவரை 13 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

நாகர்கோவில், 

குமரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் 3 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். அந்த வகையில் இதுவரை 13 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

கொரோனா பாதிப்பு

குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் டென்னிசன் தெரு, வெள்ளாடிச்சிவிளை, மணிக்கட்டிபொட்டல் அனந்தசாமிபுரம், தேங்காப்பட்டணம் தோப்பு ஆகிய பகுதிகளை சேர்ந்த 16 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து ஒவ்வொருவராக குணமாகி வந்தனர். அந்த வகையில் 10 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இதற்கிடையே சென்னைக்கு பணி நிமித்தமாக சென்ற குமரி நர்சுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவர் குமரி மாவட்டத்தில் இருந்து சென்றவர் என்பதால், அவரை குமரி மாவட்ட பாதிக்கப்பட்டோர் பட்டியலில் சுகாதாரத்துறை சேர்த்துள்ளது. அதன்படி மொத்தம் 17 பேர் பாதிக்கப்பட்டனர்.

2-ம் கட்ட பரிசோதனை

இதற்கிடையே ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 4 பேருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு நடத்திய சோதனையில் கொரோனா தொற்று இல்லை என்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்களுக்கு 2-ம் கட்ட பரிசோதனை நேற்று நடந்தது.

இதில், 3 பேருக்கு மீண்டும் நோய் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. ஒருவருக்கு மட்டும் தொற்று விலகாமல் இருந்தது.

3 பேர் வீடு திரும்பினர்

பின்னர் குணமடைந்த 3 பேரும் நேற்று மாலை வீடு திரும்பினர். இதில், 2 பெண்கள், ஒரு ஆண் ஆவர். இவர்கள் அனைவரும் மணிக்கட்டிபொட்டல் அனந்தசாமிபுரத்தை சேர்ந்தவர்கள். முன்னதாக கொரோனாவில் இருந்து மீண்டவர்களை குமரி மாவட்ட கொரோனா தடுப்பு கண்காணிப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், கல்லூரி டீன் சுகந்தி ராஜகுமாரி, மருத்துவ கண்காணிப்பாளர் அருள்பிரகாஷ் மற்றும் டாக்டர்கள் பழங்கள் கொடுத்தும், கைதட்டியும் வாழ்த்து தெரிவித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இதனால் 3 பேர் மட்டும் தொடர்ந்து கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.

இதில், அனந்தசாமிபுரம் பகுதியில் தொற்று பரவ காரணமாக இருந்த சென்னை விமான நிலைய ஊழியரும் ஒருவர். அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு 30 நாட்களுக்கு மேலாகியும் இன்னும் குணமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெளியூரில் இருந்து வருபவர்கள்

குமரி மாவட்டத்தில் கொரோனா கட்டுக்குள் இருக்கும் சமயத்தில், வெளியூரில் வசிக்கும் குமரி மாவட்ட மக்கள் தற்போது சொந்த ஊர் திரும்பி வருகிறார்கள். குறிப்பாக சென்னையில் இருந்து அதிகமான மக்கள் குமரி மாவட்டத்துக்கு வருவதாக தெரிகிறது. அவ்வாறு வருபவர்களை குமரி மாவட்ட எல்லையான ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் போலீசார் மடக்கி சோதனை செய்து வருவார்கள்.

மேலும் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய ஒரு தனியார் கல்லூரி ஒதுக்கப்பட்டு உள்ளது. அங்கு தற்போது வரை 150-க்கும் அதிகமானோருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு இருக்கிறது. அதாவது அவர்களுக்கு காய்ச்சல் இருக்கிறதா? என்று முதலில் பரிசோதனை செய்யப்படும். பின்னர் சளி மற்றும் ரத்தம் மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்படும். வெளியூரில் இருந்து குமரிக்கு வருபவர்களை குறைந்தது 14 நாட்கள் தனிமையில் இருக்கும்படி சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

Next Story