குமரி மாவட்டத்தில் ரேஷன் பொருட்கள் வினியோகம் தொடங்கியது


குமரி மாவட்டத்தில் ரேஷன் பொருட்கள் வினியோகம் தொடங்கியது
x
தினத்தந்தி 5 May 2020 7:03 AM IST (Updated: 5 May 2020 7:03 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் ரேஷன் பொருட்கள் வினியோகம் தொடங்கப்பட்டு உள்ளது.

நாகர்கோவில், 

குமரி மாவட்டத்தில் ரேஷன் பொருட்கள் வினியோகம் தொடங்கப்பட்டு உள்ளது.

ரேஷன் பொருட்கள்

தமிழகம் முழுவதும் ஊரடங்கு பாதிப்பையொட்டி கடந்த ஏப்ரல் மாதம் ஒவ்வொரு ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் நிவாரணம் மற்றும் இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டன. எனினும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் மே மாதத்திற்கான ரேஷன் பொருட்களும் இலவசமாக வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ரேஷன் பொருட்கள் வினியோகம் நேற்று தொடங்கியது. இதே போல குமரி மாவட்டத்தில் ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வினியோகம் தொடங்கப்பட்டு உள்ளது. குமரி மாவட்டத்தில் 5 லட்சத்து 43 ஆயிரத்து 246 ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் அரிசி, சீனி, பருப்பு மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

கூடுதலாக 5 கிலோ

இந்த நிலையில் ஒவ்வொரு அரிசி ரேஷன் கார்டுகளுக்கும் ஏப்ரல் முதல் ஜூன் வரை 3 மாதங்களுக்கு கார்டில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் கூடுதலாக தலா 5 கிலோ அரிசியை இலவசமாக வழங்க மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த 5 கிலோ இலவச அரிசியை மக்கள் தேவைப்பட்டால் கேட்டு பெறலாம். இவற்றின் வினியோகமும் நேற்று தொடங்கியது. ரேஷன் கடைகளில் கூட்டம் சேரக்கூடாது என்பதற்காக ‘எந்த தேதி, எந்த நேரம் வர வேண்டும்‘ என்ற விவரம் அடங்கிய ‘டோக்கன்‘கள் கார்டுதாரர்களின் வீடுகளில் வழங்கப்பட்டு உள்ளன.

பாயின்ட் ஆப் சேல்

மேலும் கூடுதல் ஒதுக்கீட்டின் அடிப்படையில் ஒரு கார்டுதாரருக்கு இம்மாதம் எவ்வளவு அரிசி வழங்க வேண்டும் என்ற விவரம், ரேஷன் கடைகளில் உள்ள ‘பாயின்ட் ஆப் சேல்‘ கருவியில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

கொரோனா வைரஸ் பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளுக்கு பொருட்களை நேரில் சென்று வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Next Story