கலெக்டர் அலுவலகத்தில் திரண்ட வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்ப கோரிக்கை
குமரி கலெக்டர் அலுவலகத்தில் வட மாநில தொழிலாளர்கள் திரண்டனர். அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க கோரிக்கை வைத்தனர்.
நாகர்கோவில்,
குமரி கலெக்டர் அலுவலகத்தில் வட மாநில தொழிலாளர்கள் திரண்டனர். அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க கோரிக்கை வைத்தனர்.
வட மாநில தொழிலாளர்கள்
கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பஸ், ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் வேலை தேடி புலம்பெயர்ந்த வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்பி செல்ல முடியாமலும், சாப்பிடுவதற்கு போதுமான உணவு கிடைக்காமலும் அவதிப்பட்டு வருகிறார்கள். இதற்கிடையே வட மாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலத்துக்கு செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
அதைத்தொடர்ந்து தமிழகத்தில் தங்கியுள்ள வட மாநில தொழிலாளர்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது.
கணக்கெடுப்பு
அதே போல குமரி மாவட்டத்தில் தங்கியுள்ள வட மாநில தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்புவதற்காக கணக்கெடுப்பு பணி கடந்த சில தினங்களாக நடந்து வருகிறது. குமரி மாவட்டத்தில் தங்கி உள்ளவர்களில் பெரும்பாலானோர் அசாம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் அரியானாவை சேர்ந்தவர்கள் ஆவர்.
இந்த நிலையில் வட மாநில தொழிலாளர்கள் நேற்று நாகர்கோவிலில் உள்ள குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரளாக வந்தனர்.
கோரிக்கை மனு
அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர். அதுபற்றி அவர்களிடம் கேட்டபோது, “நாங்கள் குமரி மாவட்டத்தில் கட்டிட பணி, கடைகள், ஓட்டல்கள், பேக்கரிகள் மற்றும் ஆஸ்பத்திரிகளில் தங்கியிருந்து வேலை செய்து வருகிறோம். ஆனால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் தற்போது நாங்கள் வேலை இழந்து உள்ளோம். இதனால் வருமானம் இல்லை. மேலும் எங்களுக்கு உணவுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது. மருத்துவ செலவுக்கு கூட எங்களிடம் பணம் இல்லை எனவே எப்படியாவது எங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும்“ என்றனர்.
முன்னதாக அனைத்து தொழிலாளர்களும் கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையோரம் திரளாக அமர்ந்திருந்தனர். ஏராளமான தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் திரண்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story