ஆந்திராவில் இருந்து கொண்டு வந்த 1 டன் கெட்டுப் போன மீன்கள் பறிமுதல் ஆரல்வாய்மொழியில் அதிகாரிகள் நடவடிக்கை


ஆந்திராவில் இருந்து கொண்டு வந்த 1 டன் கெட்டுப் போன மீன்கள் பறிமுதல் ஆரல்வாய்மொழியில் அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 5 May 2020 8:01 AM IST (Updated: 5 May 2020 8:01 AM IST)
t-max-icont-min-icon

ஆந்திராவில் இருந்து குமரி மாவட்டத்திற்கு கொண்டு வந்த 1 டன் கெட்டுப்போன மீன்களை ஆரல்வாய்மொழியில் அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.

ஆரல்வாய்மொழி, 

ஆந்திராவில் இருந்து குமரி மாவட்டத்திற்கு கொண்டு வந்த 1 டன் கெட்டுப்போன மீன்களை ஆரல்வாய்மொழியில் அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.

ஊரடங்கு

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது 3-ம் கட்டமாக வருகிற 17-ந் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சரக்கு வாகன போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்திற்கு வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சரக்கு வாகனங்கள் வருகின்றன.

இவ்வாறு வரும் அனைத்து வாகனங்களும் ஆரல்வாய்மொழியில் தீவிர சோதனைக்கு பின்பே அனுமதிக்கப்படுகிறது. இதற்காக ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். போலீசாருடன் வருவாய் துறை, மீன்வளத்துறை, மருத்துவத்துறையினரும் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மீன் ஏற்றி வந்த லாரி

ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் நேற்று மதியம் மீன்வளத்துறை அதிகாரிகள் சுந்தர், கார்தீபன் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக ஒரு மீன் லாரி வந்தது. அதிகாரிகள் அந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனையிட்ட போது அதில் 1 டன் சூறை மீன், 2 டன் சாளை மீன் இருந்தது. டிரைவரிடம் விசாரணை நடத்திய போது, இந்த மீன்களை ஆந்திராவில் இருந்து களியக்காவிளைக்கு எடுத்து செல்வதாக கூறினார். அதிகாரிகள் மீன்களை ஆய்வு செய்த போது 1 டன் சூறை மீன் கெட்ட நிலையில் துர்நாற்றம் வீசிக்கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பறிமுதல்

இதுகுறித்து உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உணவு பாதுகாப்பு மாவட்ட நல அலுவலர் செந்தில்குமார், தோவாளை, அகஸ்தீஸ்வரம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் தங்கசிவம், தக்கலை உணவு பாதுகாப்பு அலுவலர் பிரவின் ரகு, ஆரல்வாய்மொழி பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயமாலினி ஆகியோர் அங்கு வந்தனர். பின்பு சூறை மீன்களை சோதனை செய்தபோது அழுகி கெட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் 1 டன் சூறை மீன்களை பறிமுதல் செய்து அருகில் உள்ள ஒரு தோட்டத்தில் குழி தோண்டி புதைத்து அழித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மீன்களின் மதிப்பு ரூ.2½ லட்சம் ஆகும். பின்னர் லாரியை சாளை மீனுடன் களியக்காவிளைக்கு அனுப்பி வைத்தனர்.

Next Story