நர்சுக்கு கொரோனா தொற்று: செறுதிக்கோணம் பகுதியை தனிமைப்படுத்தி அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு காய்ச்சல் பாதிப்பா? என வீடு, வீடாக ஆய்வு


நர்சுக்கு கொரோனா தொற்று: செறுதிக்கோணம் பகுதியை தனிமைப்படுத்தி அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு காய்ச்சல் பாதிப்பா? என வீடு, வீடாக ஆய்வு
x
தினத்தந்தி 5 May 2020 8:11 AM IST (Updated: 5 May 2020 8:11 AM IST)
t-max-icont-min-icon

குலசேகரம் அருகே செறுதிக்கோணத்தை சேர்ந்த நர்சுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையொட்டி அவரது கிராமத்தை தனிமைப்படுத்தி அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

குலசேகரம், 

குலசேகரம் அருகே செறுதிக்கோணத்தை சேர்ந்த நர்சுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையொட்டி அவரது கிராமத்தை தனிமைப்படுத்தி அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். கொரோனா அறிகுறி ஏதேனும் இருக்கிறதா? என வீடு, வீடாக சென்று ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

நர்சுக்கு கொரோனா

குமரி மாவட்டத்தில் 16 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் 10 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். மீதமுள்ள 6 பேருக்கும் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், குலசேகரம் அருகே செறுதிக்கோணம், முல்லைபள்ளிவிளை பகுதியை சேர்ந்த ஒரு நர்சுக்கு சென்னையில் லேப் டெக்னீசியன் பணி கிடைத்தது. இதனையடுத்து அந்த நர்சு கடந்த 29-ந் தேதி தன்னுடைய கணவருடன் சென்னைக்கு கார் மூலம் சென்றார். குமரி மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு சென்றதால், பணியில் சேரும் போது நர்சுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், கொரோனா தொற்றால் அவர் பாதிக்கப்பட்டிருந்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. இதற்கிடையே நர்சின் கணவர், டிரைவர் ஊருக்கு திரும்பி விட்டனர்.

12 பேருக்கு பரிசோதனை

நர்சுக்கு கொரோனா பாதிப்பு இருந்த விவரம் குமரி மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சுகாதாரத்துறையினர் செறுதிக்கோணம் கிராமத்திற்கு சென்று நர்சுடன் நெருங்கி பழகியவர்களை தனிமைப்படுத்தினர். நர்சின் கணவர், அவருடைய 2 மாத குழந்தை உள்பட 12 பேரின் ரத்தம், சளி மாதிரி எடுக்கப்பட்டு கொரோனா பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.

பரிசோதனை முடிவில் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதனால், நர்சுக்கு சென்னையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அதிகாரிகள் கண்காணிப்பு

ஆனாலும், செறுதிக்கோணம் கிராமத்தை தனிமை படுத்தி அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். நேற்று செறுதிக்கோணத்திற்கு செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டு போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டது. அரசமூடு சந்திப்பில் இருந்து செறுதிக்கோணத்திற்கு செல்லும் சாலையில் கிராமத்தின் நுழைவு பகுதி, அரியாம்பகோடு ஷட்டர் பகுதி, மங்கலம் பாலம் போன்ற பகுதிகளில் போலீசார் தடுப்பு வேலி வைத்து சாலைகளை முற்றிலுமாக மூடினர்.

மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி, பத்மநாபபுரம் உதவி கலெக்டர் சரண்யா அரி, திருவட்டார் தாசில்தார் அஜிதா, குலசேகரம் பேரூராட்சி செயல் அலுவலர் ரமாதேவி, பொன்மனை பேரூராட்சி செயல் அலுவலர் விஜயகுமாரி, குலசேகரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசுந்தர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் முகாமிட்டு பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர தடை விதித்தனர். பொதுமக்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் வீடுகளுக்கு சென்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தடுப்பு பணி தீவிரம்

மேலும், சுகாதார பணியாளர்கள் தடை செய்யப்பட்ட பகுதியில் கிருமி நாசினி தெளிப்பு, பிளச்சிங் பவுடர் தூவுதல் போன்ற பணிகளை மேற்கொண்டனர். வீடு வீடாக சென்று யாருக்காவது சளி, இருமல், காய்ச்சல் போன்ற பாதிப்பு உள்ளதா எனவும் கணக்கெடுத்தனர். இந்த பணி தினமும் நடைபெறும். அப்போது, கொரோனா அறிகுறி இருந்தால், உடனடியாக அவர்களிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

தற்போது, கொரோனா பரவல் அந்த பகுதியில் இல்லையென்றாலும், ஏதாவது ஒரு வகையில் வைரஸ் ஊடுருவி விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1,060 குடும்பத்தினர்

செறுதிக்கோணம், முல்லைப்பள்ளிவிளை மற்றும் அதை சுற்றியுள்ள செக்குமூடு, புரவூர், அக்கம்விளை போன்ற பகுதிகளை சேர்ந்த 1,060 குடும்பத்தினரை அதிகாரிகள் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். இந்த பகுதிகளை சேர்ந்த யாருக்காவது திடீரென காய்ச்சல் இருந்தால் அவர்களை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் ஏற்கனவே நாகர்கோவில் டென்னிசன் தெரு, வெள்ளாடிச்சிவிளை, தேங்காப்பட்டணம் தோப்பு மற்றும் மணிக்கட்டிபொட்டல் அனந்தசாமிபுரம் போன்ற பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். தற்போது செறுதிக்கோணம் பகுதியும் தனிமை படுத்தப்பட்டுள்ளது குலசேகரம் பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதேபோல் நர்சின் கணவர் வசிக்கும் கல்லறவிளை, டிரைவர் வசிக்கும் முளவிளை பகுதியை சேர்ந்த பகுதியையும் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

Next Story