வெளிமாநிலங்களில் இருந்து வருவோரை கண்டறிய கண்காணிப்பு குழு அமைக்கப்படும் கலெக்டர் ஷில்பா தகவல்
வெளி மாநிலங்களில் இருந்து வருவோரை கண்டறிய கண்காணிப்பு குழு அமைக்கப்படும் என கலெக்டர் ஷில்பா தெரிவித்தார்.
நெல்லை,
வெளி மாநிலங்களில் இருந்து வருவோரை கண்டறிய கண்காணிப்பு குழு அமைக்கப்படும் என கலெக்டர் ஷில்பா தெரிவித்தார்.
தகவல் மையம்
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு பணிகளை கண்காணிக்கும் தன்னார்வலர்கள் மற்றும் கிராம கண்காணிப்பு தகவல் மையத்தை கலெக்டர் ஷில்பா நேற்று திறந்து வைத்தார். மேலும் நகர்ப்புற கண்காணிப்பு குழு விழிப்புணர்வு கையேட்டையும் வெளியிட்டார். பின்னர் கலெக்டர் ஷில்பா கூறியதாவது:-
கிராம பகுதியில் கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த 204 கிராம பஞ்சாயத்துகளிலும் தன்னார்வலர்கள், பஞ்சாயத்து செயலர், சமூக ஆர்வலரை கொண்ட 3 முதல் 5 நபர் கொண்ட கிராம கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. வெளி மாநிலம், வெளி நாடுகள் மற்றும் முக்கிய நகரங்களில் இருந்து தங்களது பகுதிக்கு வருகை தந்தால், அவர்களை கண்டறிந்து தகவல் வழங்குவதற்கு ஊரக மற்றும் நகர்ப்புற கண்காணிப்பு குழுக்கள் மாவட்ட நிர்வாகம் மூலம் அமைக்கப்படும்.
மருத்துவ வசதி
பொதுமக்கள் கடைகளுக்கு செல்லும் போது சமூக இடைவெளியை கடைபிடித்தல், முக கவசம் அணிதல் மற்றும் தங்களது வீடுகளை சுத்தமாக பராமரித்தல், பொது இடங்கள் மற்றும் பொது கழிவறைகளை சுத்தமாக பேணுவதை உறுதி செய்தல் போன்ற விழிப்புணர்வை இந்த குழுவினர் ஏற்படுத்துவார்கள்.
மேலும் வெளிநாடு, வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களின் விவரங்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு தெரிவிப்பார்கள். வெளி நபர்கள் 14 நாட்களுக்கு வீட்டிலேயே தனிமைப்படுத்துதல், வெளி நபர்கள் ஊருக்குள் வரும் பட்சத்தில் அவர்களை தனிமைப்படுத்த வசதியாக பள்ளிக்கூடம் மற்றும் சமுதாய நலக்கூடம் போன்ற பொது கட்டிடங்களை தேர்வு செய்தும், தனிமைப்படுத்தலில் உள்ள நபர்களுக்கு தேவையான உணவு மற்றும் மருத்துவ வசதிகளை செய்வார்கள்.
தனிமைப்படுத்துதல்
வெளி நபர்கள் ஊருக்குள் வரும் பட்சத்தில் அவர்களை தனிமைப்படுத்திடவும், அவர்களுக்கு சுகாதார அலுவலர்கள் மூலம் தொற்று உள்ளதா? என பரிசோதனை செய்யவும் குடும்ப நபர்களுடன் வசிப்பதால் ஏற்படும் பாதிப்பை பொதுமக்கள் அறியச் செய்தல், தனிமைப்படுத்தப்பட்ட நபர்களுக்கு நாள் தோறும் அந்த பகுதிக்கு உட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.
கொரோனா தொற்று உடையவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், அவர்கள் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள செய்தல், அவர்கள் வெளியே வருவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் (பயிற்சி) சிவகுரு பிரபாகரன், செய்தி- மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story