கூடங்குளம் முதல் அணு உலையில் மின்உற்பத்தி மீண்டும் தொடங்கியது
கூடங்குளம் முதல் அணு உலையில் மின்உற்பத்தி மீண்டும் தொடங்கியது.
வள்ளியூர்,
கூடங்குளம் முதல் அணு உலையில் மின்உற்பத்தி மீண்டும் தொடங்கியது.
கூடங்குளம் அணுஉலை
நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகாவில் அமைந்துள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ரஷ்ய நாட்டு தொழில்நுட்ப உதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. 2 அணு உலைகளிலும் மின்உற்பத்தி நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் கடந்த 30-ந் தேதி மதியம் 12.50 மணியளவில் முதல் அணு உலையில் பராமரிப்பு பணிக்காகவும், எரிபொருட்கள் நிரப்பும் பணிக்காகவும் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்படைந்தது. இந்த பணிகள் இன்னும் 2 மாத காலத்திற்குள் நிறைவு பெற்று மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்படும் என்று அணுமின் வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.
மின்உற்பத்தி மீண்டும் தொடங்கியது
இந்த நிலையில் தற்போது நிலவும் கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக பணியாளர்களின் பற்றாக்குறையால் வருடாந்திர பராமரிப்பு பணி அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது. அதன்படி நேற்று காலை 7.15 மணியளவில் முதல் அணு உலையில் மீண்டும் மின்உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளதாகவும், தற்போது 260 மெகாவாட் மின்உற்பத்தி நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஊரடங்கு காரணமாக குறைந்த அளவு தொழில்நுட்ப வல்லுனர்களை கொண்டு பராமரிப்பு பணிகள் நடைபெற அறிவுறுத்தியதால் பராமரிப்பு மற்றும் எரிபொருள் நிரப்பும் பணிகள் இந்த மாத இறுதியில் நடத்த அணுமின் வட்டாரம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2-வது அணு உலையில் தற்போது 900 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அணு உலைகளின் மூலம் சுமார் 950 மெகாவாட் மின்சாரம் தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் என அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
Related Tags :
Next Story