வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கக்கோரி வடமாநிலத்தவர்கள் தர்ணா


வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கக்கோரி வடமாநிலத்தவர்கள் தர்ணா
x
தினத்தந்தி 5 May 2020 8:50 AM IST (Updated: 5 May 2020 8:50 AM IST)
t-max-icont-min-icon

சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கக்கோரி வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தர்ணாவில் ஈடுபட்ட வடமாநிலத்தவர்கள் கலைந்து செல்ல மறுத்ததால் போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.

வேலூர்,

வேலூர் சி.எம்.சி. மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த வடமாநிலத்தவர்கள் ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். அதேபோன்று கட்டிட தொழில் உள்பட பல்வேறு தொழில்களில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்கள் விடுதி, மற்றும் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறாக வேலை, சிகிச்சைக்காக மேற்கு வங்காளம், ஒடிசா, ஜார்கண்ட், பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த 7 ஆயிரம் பேர் வேலூரில் தங்கி உள்ளனர். ஊரடங்கால் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவிக்கும் அவர்களுக்கு மாநகராட்சி மூலம் தினமும் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வடமாநிலத்தவர்கள் சுமார் 500 பேர் கார், ஆம்புலன்களில் சொந்த ஊருக்கு கடந்த மாதம் அனுப்பி வைக்கப்பட்டனர். மீதமுள்ள வடமாநிலத்தவர்கள் தங்களையும் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர். மாநில நிர்வாகத்திடம் அனுமதி பெறுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக அவர்களுக்கு வாகன அனுமதி சீட்டு வழங்கப்படவில்லை. இது குறித்து அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

தர்ணா போராட்டம்

இதனை ஏற்றுக்கொள்ளாத வடமாநிலத்தவர்கள் எப்படியாவது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்துக்கு தினமும் திரண்டு வந்த வண்ணம் உள்ளனர். நேற்று காலையும் சுமார் 500-க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் கலெக்டர் அலுவலகம் அருகே திரண்டனர். பின்னர் அவர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யக்கோரி கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து அவர்கள் அப்பகுதியில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார், வேலூர் உதவி கலெக்டர் கணேஷ், தாசில்தார் ரமேஷ் ஆகியோர் அங்கு சென்று வடமாநிலத்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், “வேலூர் கலெக்டர் அலுவலகம் மூலம் பிற இடங்களுக்கு செல்ல வாகன அனுமதி சீட்டு வழங்கப்படவில்லை. இணையதளம் மூலமே பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெளிமாநிலத்தவர்கள் ரெயில் மூலம் சொந்த ஊருக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படுவார்கள். அதுவரை விடுதி, திருமண மண்டபங்களில் இருக்க வேண்டும். கலெக்டர் அலுவலகத்துக்கு அனுமதி சீட்டு பெற வரக்கூடாது. தற்போது இங்கிருந்து அனைவரும் கலைந்து செல்ல வேண்டும்” என்று கூறினார்கள். இதனை அவர்கள் ஏற்காமல் கலைந்து செல்ல மறுத்து தொடர்ந்து அங்கேயே நின்று கொண்டிருந்தனர்.

விரட்டியடிப்பு

சிறிதுநேரம் பொறுத்து பார்த்த போலீசார் வடமாநிலத்தவர்கள் கலைந்து செல்லாததால் அவர்களை அங்கிருந்து விரட்டியடித்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story