ஊரடங்கால் அச்சகங்கள் முடங்கியதால் ஊதியமின்றி தொழிலாளர்கள் தவிப்பு


ஊரடங்கால் அச்சகங்கள் முடங்கியதால் ஊதியமின்றி தொழிலாளர்கள் தவிப்பு
x
தினத்தந்தி 5 May 2020 8:56 AM IST (Updated: 5 May 2020 8:56 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு காரணமாக அச்சக தொழில் முடங்கியுள்ளதால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். எனவே குறைந்தபட்ச பணியாளர்களுடன் அச்சகங்கள் இயங்க அனுமதியளிக்க வேண்டும் என தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

திருப்பத்தூர்,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் அனைத்து வகையான தொழில் நிறுவனங்களும் செயல்படாமல் முடங்கியுள்ளன. இதில் அச்சக உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி, ஆலங்காயம், கந்திலி ஆகிய பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட அச்சகங்கள் இயங்கி வருகின்றன.

இதில் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். கடந்த 25-ந் தேதி முதல் ஊரடங்கையொட்டி அனைத்து அச்சகங்களும் மூடப்பட்டதால் தொழிலாளர்கள் வருமானமின்றி வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இதனால் அச்சகத் தொழில் முற்றிலும் முடங்கி உள்ளது.

வருமான இழப்பு

இது குறித்து அச்சக தொழிலில் உள்ள பரந்தாமன், எழிலரசன் ஆகியோர் கூறியதாவது:-

மே மாதம் பள்ளிக்கூட விடுமுறை காலம். மேலும் திருவிழாக்கள் நடைபெறும் காலம். அது மட்டுமின்றி திருமணம் மற்றும் சுப காரிய விசேஷங்களுக்கு அழைப்பிதழ்கள், விளம்பர நோட்டீஸ்கள், கோவில் திருவிழா நோட்டீஸ்கள், போஸ்டர்கள் மற்றும் பல வகையான நிகழ்ச்சிகளுக்கு அழைப்பிதழ் ஆர்டர்கள் இந்த மாதத்தில்தான் அதிக அளவு கிடைக்கும்.

இந்த நிலையில் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டதால் ஆர்டர்கள் கிடைக்காததோடு ஊரடங்கால் அச்சகமும் மூடப்பட வேண்டியதாகி விட்டது. இதனால் எங்களுக்கு பெருமளவில் வருமான இழப்பு ஏற்பட்டு உள்ளது.

பெரும்பாலான அச்சகங்கள் நகரின் முக்கிய பகுதியில் வாடகைக் கட்டிடத்தில் இயங்குவதால் கடை வாடகையை கூட கொடுக்க முடியாமல் உள்ளது. மேலும் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். எதிர்காலத்தில் இன்னும் சில மாதங்களுக்கு கூட்டம் கூட நடைமுறைகள் நீடிக்கும் என்பதால் எங்களுடைய தொழில் மேலும் நலிவடைந்து போகும் அபாயம் உள்ளது. எனவே குறைந்த பணியாளர்களுடன் அச்சகம் இயக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும்.

வேலையின்றி தவிப்பு

கொரோனா பாதிப்பு காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் அச்சகங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருப்பதால் பல்வேறு தொழிலாளர்கள், டிசைனர்கள், புத்தக பைண்டிங் செய்பவர்கள், பிரிண்டிங் ஆபரேட்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் கடந்த ஒரு மாத காலமாக வேலையின்றி வீட்டில் முடங்கிக் கிடக்கிறார்கள். மாநில அளவில் பார்த்தால் எங்கள் தொழிலில் தற்போது சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலையின்றி தவிக்கின்றனர். அச்சகத் தொழிலாளர்களுக்கு என தனி வாரியம் இல்லாததால் அரசாங்கத்தின் எந்த உதவியையும் பெற முடியவில்லை. வேறு வருமானமின்றி குடும்பம் நடத்த முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம்.

எனவே தமிழக அரசு, வரும் காலத்தில் எங்களுக்கு என தனியாக அச்சகர் தொழிலாளர்கள் நல வாரியம் அமைக்க வேண்டும். மாவட்ட நிர்வாகமும் எங்களைப் போன்ற சக தொழிலாளர்கள் வாழ்வாதாரத்திற்கு உதவிட வேண்டும். பொருளுதவி வழங்க வேண்டும்.

இவ்வாறு கூறினர்.


Next Story