சொந்த ஊருக்கு செல்ல ரெயில் இயக்க வலியுறுத்தி நெல்லை கலெக்டர் அலுவலகத்தை வடமாநில தொழிலாளர்கள் முற்றுகை
வடமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ரெயிலை இயக்க வலியுறுத்தி நெல்லை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
நெல்லை,
வடமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ரெயிலை இயக்க வலியுறுத்தி நெல்லை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கூடங்குளத்திலும் போராட்டம் நடந்தது.
வடமாநில தொழிலாளர்கள்
கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா முடிவுக்கு வராததால், ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. 40 நாட்களை கடந்து விட்ட நிலையில் மேலும் 14 நாட்கள், அதாவது வருகிற 17-ந்தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இதனால் வேலை தேடி வெளியூர்களுக்கு சென்றவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாத நிலையில் தவித்து வந்தனர். கடந்த 3-ந்தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வந்து விடும், அதன்பிறகு சொந்த ஊருக்கு செல்லலாம் என்று கருதி வந்த நிலையில், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது அவர்களுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தியது.
கட்டிட பணி
நெல்லையில் பீகார், உத்தரபிரதேசம், ஜார்கண்ட், மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தங்கியிருந்து, போர்வை, சுடிதார் உள்ளிட்டவற்றை வியாபாரம் செய்து வந்தனர். பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரி பகுதியில் தனியார் காண்டிராக்ட் நிறுவனத்தின் கீழ் கட்டிட பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் வேலை மற்றும் வியாபாரம் இல்லாமல் தவித்த அவர்கள் சொந்த ஊருக்கு செல்ல விரும்பினார்கள். அதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால், தாங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அவர்கள் புகார் கூறி வந்தனர்.
கலெக்டர் அலுவலகம் முற்றுகை
மேலும், ஆத்திரம் அடைந்த வடமாநில தொழிலாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உடனே போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், பிற மாநிலங்களில் வசித்து வந்த தொழிலாளர்களை வடமாநிலங்களுக்கு அனுப்பி வைக்க ரெயில்கள் இயக்குவது போல் நெல்லையில் இருந்தும் ரெயில் இயக்க வேண்டும்.
இதற்காக அந்தந்த பகுதி போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடமும், ஆன்லைன் மூலமும் விண்ணப்பித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நெல்லையில் தற்போது நாங்கள் தங்கி இருக்கும் விடுதி மேலாளர் வாடகை தந்தால் மட்டுமே அறையில் தங்க வேண் டும். இல்லாவிட்டால் அறையை விட்டு காலி செய்யுங்கள் என்று கூறுகிறார். மேலும், சாப்பாடு வசதியும் சரியாக இல்லை. எனவே, எங்களை உடனே எங்கள் மாநிலங்களுக்கு அனுப்பி வையுங் கள்” என்று வலியுறுத்தினர்.
நடவடிக்கை
அதற்கு போலீசார், மாநில அரசு அதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறது. விரைவில் விருப்பம் உள்ள அனைவரும் ரெயில் மூலம் அவரவர் மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று உறுதிஅளித் தனர். இதையடுத்து வடமாநில தொழிலாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
கூடங்குளம் அணுமின்நிலையம்
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3, 4-வது அணுஉலைகள் கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த பணியை தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் செய்து வருகிறது. இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த மார்ச் மாதம்முதல் கொரோனா ஊர டங்கு காரணமாக பணிகள் தற்காலிமாக நிறுத்தப்பட்டது.
இதனால் ஒப்பந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் அணுமின் நிலைய வளாகம் அருகேயுள்ள குடியிருப்பு பகுதிகளில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். அப்போது ஒரு சில நாட்கள் உணவு, மருத்துவ வசதி போன்ற அடிப்படை வசதிகள் கிடைக்காமல் இருந்ததாக தொழிலாளர்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் அது தனியார் நிறுவனங்கள் மூலம் சரிசெய்யப்பட்டது.
போராட்டம்
இந்த நிலையில் வெளிமாநிலங்களில் உள்ளவர்கள் தங்கள் பகுதிக்கு செல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க தனியார் நிறுவனம் மற்றும் அணுமின் நிலைய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, தங்களது உடைமைகளுடன் அணுமின்நிலைய வாயில் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
உடனே ராதாபுரம் தாசில்தார் செல்வன், கூடங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆண்டனி ஜெகதா மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அரசிடம் அனுமதி பெற்று சொந்த ஊருக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து அவர் கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story