திருச்சியில் ஊரடங்கை மறந்து குறைதீர்க்கும் கூட்டம் போல கலெக்டர் அலுவலகத்தில் திரண்ட மக்கள்


திருச்சியில் ஊரடங்கை மறந்து குறைதீர்க்கும் கூட்டம் போல கலெக்டர் அலுவலகத்தில் திரண்ட மக்கள்
x
தினத்தந்தி 5 May 2020 10:38 AM IST (Updated: 5 May 2020 10:38 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் ஊரடங்கை மறந்து குறைதீர்க்கும் கூட்டம்போல கலெக்டர் அலுவலகத்திற்கு மக்கள் திரண்டு வந்தனர்.

திருச்சி, 

திருச்சியில் ஊரடங்கை மறந்து குறைதீர்க்கும் கூட்டம்போல கலெக்டர் அலுவலகத்திற்கு மக்கள் திரண்டு வந்தனர்.

திரண்டு வந்த மக்கள்

திருச்சியில் ஊரடங்கு காரணமாக திங்கட்கிழமை தோறும் நடக்கும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் குறைகளை கலெக்டர் அலுவலக வரவேற்பு வளாகத்தில் உள்ள புகார் பெட்டியில் போடுவதற்கு ஏதுவாக அங்கு பெரிய அளவிலான மரப்பெட்டி தயாராக எப்போதும் உள்ளது.

இந்த நிலையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதாக கருதியும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடப்பதுபோல எண்ணி திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு பல்வேறு தரப்பினரு திரண்டு வந்தனர். அவர்களை கலெக்டர் அலுவலகம் உள்ளே செல்ல விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். குறிப்பிட்ட வாகனங்களை மட்டுமே சோதனை செய்து போலீசார் உள்ளே அனுமதித்தனர். இதனால், நேற்று கலெக்டர் அலுவலக வளாகம் பரபரப்பானது.

சலூன் கடைகளை திறக்கக்கோரிக்கை

திருச்சி மாவட்ட மாநகர மருத்துவர் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக கலெக்டர் அலுவலகத்தில் 50-க்கும் மேற்பட்டோர் மனு கொடுக்க வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து வெளியே நிறுத்தினர். அவர்கள் கொண்டுவந்த மனுவில், ஊரடங்கால் சலூன் கடைகளை அடைத்ததால், தங்கள் வாழ்வாதாரம் பாதிக் கப்பட்டுள்ளது. எனவே எங்களுக்கு நிதி மற்றும் பொருளுதவி வழங்க வேண்டும். மேலும் சலூன்களை திறக்க அனுமதிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இதே கோரிக்கையை வலியுறுத்தி மண்ணச்சநல்லூர் நகர முடிதிருத்தும் தொழிலாளர் நல சங்கத்தினர் மண்ணச்சநல்லூர் தாசில்தார் முருகேசனிடம் நேற்று மனு கொடுத்தனர்.

வாழை இலை வியாபாரிகள்

இதுபோல திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் வாழை இலை வியாபாரம் செய்பவர்கள், வாழை இலைகளுடன் வந்து முறையிட வந்தனர். அவர்களை போலீசார் உள்ளே விடாததால் மனுவை மட்டும் கொடுத்தனர். கடந்த 40 நாட்களாக வாழை இலை சாலையோர கடை போட அனுமதிக்காததால் வாழை இலை விவசாயிகளும், வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, எங்களை காந்தி மார்க்கெட் பகுதியில் சாலையோரம் வாழைஇலை விற்க அனுமதிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர்

போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் கொடுத்த மனுவில், திருச்சி மாவட்டத்தில் ஊரடங்கால் 200-க்கும் மேற்பட்ட தனியார் பஸ்களின் டிரைவர்கள், கண்டக்டர்கள் குடும்பங்கள் தவித்து வருகிறோம். பஸ் உரிமையாளர்களும் எங்கள் மீது அக்கறையின்றி இருக்கிறார்கள். எனவே, எங்களுக்கு அரசு நிவாரண நிதியும், பஸ் உரிமையாளர்கள் உரியநிதி வழங்கவும் பரிந்துரை செய்திட வேண்டும் என கூறப்பட்டிருந்தது. மேலும் இ-பாஸ் விண்ணப்பிக்க வெளி மாநிலத்தவர் பலர் திருச்சி கலெக்டர் அலுவலகம் வந்தனர். ஆன்-லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என அதிகாரிகள் கூறியதால், ஏமாற்றம் அடைந்தனர். கலெக்டர் அலுவலக பிரதான நுழைவு வாயிலில் இணையதள முகவரி அடங்கிய பேனர் தொங்க விடப்பட்டிருந்தது. அதை பலர் செல்போனில் படம் எடுத்து கொண்டு திரும்பினர். மேலும் உத்தர பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலத்தை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் பலர் நேற்று சொந்த ஊர் செல்ல அனுமதி கேட்டு, முக கவசங்கள் அணிந்து திருச்சி காந்தி மார்க்கெட் போலீஸ் நிலையம் வந்து காத்திருந்தனர்.

Next Story