கொரோனா வைரஸ் எதிரொலியாக மல்லிகை பூக்களின் விலை கடும் வீழ்ச்சி விவசாயிகள் கவலை
கொரோனா வைரஸ் எதிரொலியாக மல்லிகை பூக்களின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கரூர்,
கொரோனா வைரஸ் எதிரொலியாக மல்லிகை பூக்களின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பூ சாகுபடி
கரூர் மாவட்டத்தில் நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்கள் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. அதற்கு அடுத்தப்படியாக சூரியகாந்தி, நிலக்கடலை உள்ளிட்ட எண்ணெய் வித்துக்களும் மற்றும் பூக்களும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டத்தை பொறுத்த வரை வாங்கல், மாயனூர், லாலாபேட்டை உள்ளிட்ட காவிரி ஆற்று பகுதிகளில் மல்லிகை பூ சாகுபடி அதிக அளவில் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று நோயை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் 24-ந்தேதி முதல் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளதால் கோவில் திருவிழா நடத்த தடை உள்ளதோடு திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் எளிய முறையில் நடத்த மட்டுமே அனுமதி உள்ளது. மேலும் பூ மார்க்கெட்டுகளும் மூடப்பட்டு உள்ளதுடன் பூக்களை பறிக்க ஆட்கள் கிடைக்காமலும், அவ்வாறு பறித்தாலும் அதை கொண்டு வருவதற்கு வாகன வசதி இல்லாததால் பூக்களின் விலை கடும் சரிவை சந்தித்து உள்ளது.
விலை வீழ்ச்சி
இதுகுறித்து பூ வியாபாரிகள் கூறுகையில், சித்திரை, வைகாசி ஆனி மாதங்களில் திருமணம் கோவில் திரு விழாக்கள் அதிகம் நடைபெறும். ஆனால் தற்போது ஊரடங்கு உத்தரவால் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் எளிய முறையில் மட்டுமே நடக்கிறது.
கோவில் திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இதனால் பூக்களின் தேவை குறைந்துள்ளதால் விலையும் வீழ்ச்சி அடைந்து உள்ளது. குறிப்பாக சித்திரை, வைகாசி மாதத்தில் ஒரு கிலோ மல்லிகை ரூ.2 ஆயிரம் வரை விற்கும். தற்போது தள்ளுவண்டியில் ஒரு கிலோ ரூ.40 முதல் 80 வரை மட்டுமே விலை போகிறது. இதனால் கூலிக்கு கூட கட்டுபடி ஆகவில்லை எனவே விவசாயிகள் சிலர் பூக்கள் பறிப்பதை கூட நிறுத்தி விட்டார்கள். எனவே தமிழக அரசு பூ விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என கூறினார்.
Related Tags :
Next Story