அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களில் ஒரே நாளில் 49 பேருக்கு கொரோனா
அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களில் ஒரே நாளில் 49 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அரியலூர்,
அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களில் ஒரே நாளில் 49 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கோயம்பேடு காய்கறி மார்க்கெட்
அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் கூலித் தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கோயம்பேடு காய்கறி மார்க்கெட் மூடப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு வேலை பார்த்த தொழிலாளர்கள் அங்கிருந்து காய்கறிகள் ஏற்றி வந்த சரக்கு வேன், லாரிகள் மூலம் சொந்த ஊருக்கு திரும்பினர்.
இதில் கடந்த 2-ந் தேதி மட்டும் அரியலூர் மாவட்டத்தில் 18 பேருக்கும், பெரம்பலூர் மாவட்டத்தில் 2 பேருக்கும், என மொத்தம் 20 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று முன்தினம் அரியலூர் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒரே நாளில் 49 பேர்
இந்த நிலையில் கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் இருந்து பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களுக்கு திரும்பியவர்களை சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தி, கடந்த 2-ந்தேதி அவர்களின் சளி, ரத்த மாதிரிகளை எடுத்து பரிசோதனைக்காக அனுப்பினர். இதேபோல் அந்த மாவட்டங்களில் கொரோனா தொற்று அறிகுறி இருந்தவர்களின் சளி, ரத்த மாதிரிகளும் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனை முடிவில் பெரம்பலூர் மாவட்டத்தில் 25 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 24 பேருக்கும் என மொத்தம் 49 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.
இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் நல்லறிக்கையை சேர்ந்த ஒரு பெண் மற்றும் 6 ஆண்கள், புதுவேட்டக்குடியை சேர்ந்த 3 பேர், அருணகிரிமங்கலத்தை சேர்ந்த 2 பேர், கீழப்பெரம்பலூரை சேர்ந்த 3 பேர், பெரம்பலூரை சேர்ந்த ஒருவர், நன்னையில் ஒருவர், சில்லக்குடியில் ஒருவர், கொளத்தூரில் ஒருவர், இலுப்பைக்குடியில் பெண் ஒருவர், திம்மூரில் ஒருவர், துங்கபுரத்தை சேர்ந்த 18 வயது சிறுமி, கோவில்பாளையத்தை சேர்ந்த ஒருவர் உள்பட 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 21 பேர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையிலும், 4 பேர் திருச்சி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 24 பேர் கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் இருந்து திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆம்புலன்ஸ் டிரைவர்கள்
அரியலூர் மாவட்டத்தில் உள்ளியக்குடி தெற்கு தெருவை சேர்ந்த ஒருவர், கொலையனூர் நடுத்தெருவை சேர்ந்த ஒருவர், நாகமங்கலம் வடக்கு தெருவை சேர்ந்த ஒருவர், செந்துறை பெரியாகுறிச்சியை சேர்ந்த ஒருவர், அதே பகுதியில் உள்ள நல்லன் காலனியை சேர்ந்த ஒருவர், சிறுகளத்தூர் காலனி தெருவை சேர்ந்த ஒருவர், கருமங்கலம் கீழ தெருவை சேர்ந்த 2 பேர், காரைக்குறிச்சியை சேர்ந்த ஒருவர், கடுகூர் மேலத் தெருவை சேர்ந்த 18 வயது சிறுவன், முனியங்குறிச்சியை சேர்ந்த 2 பேர், தா.பழூர் காலனி தெருவை சேர்ந்த ஒருவர், அம்பாவூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஒருவர், உடையார்பாளையம் சிந்தாமணியை சேர்ந்த 2 பேர், உடையார்பாளையம் வானதிரயான்பட்டணம் தெற்கு தெருவை சேர்ந்த ஒருவர், உடையார்பாளையம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த ஒருவர், கோவிந்தபுத்தூர் காலனி தெருவை சேர்ந்த ஒருவர், சிந்தாமணி வடக்கு தெருவை சேர்ந்த ஒருவர் ஆகியோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அரியலூர் மாவட்டத்தில் 108 ஆம்புலன்சில் பணிபுரியும் 3 டிரைவர்களுக்கும், ஒரு பெண் மருத்துவ உதவியாளருக்கும் என மொத்தம் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் டிரைவர்கள் கூவத்தூர் அருகே உள்ள அருளாண்டபுரம், உடையார்பாளையம் கீழவேலி, ஆண்டிமடம் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவார்கள். மருத்துவ உதவியாளர் ஆண்டிமடம் விளந்தை திலகர் நகர் தெற்கு தெருவை சேர்ந்தவர் ஆவார். இவர்கள் 4 பேரும் ஐதராபாத்தில் பயிற்சி முடித்து விட்டு சென்னை வந்து, அங்கிருந்து ஆம்புலன்சு மூலம் அரியலூர் வந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மொத்தம் 24 பேரும் அரியலூர் தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பொதுமக்கள் அச்சம்
இந்நிலையில் அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களுக்கு சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் இருந்து நேற்று வந்தவர்களை போலீசார் பிடித்து முகாம்களுக்கு அனுப்பி தனிமைப்படுத்தி வைத்துள்ளனர். அவர்களின் சளி, ரத்த மாதிரிகளை எடுத்து பரிசோதனைக்காக சுகாதாரத்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர். அரியலூர்-பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று ஒரே நாளில் மொத்தம் 49 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story