நாளை திறக்கப்படுவதால் டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்க ஏற்பாடு - வட்டம் போடும் பணி தீவிரம்


நாளை திறக்கப்படுவதால் டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்க ஏற்பாடு - வட்டம் போடும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 5 May 2020 11:00 PM GMT (Updated: 5 May 2020 6:54 PM GMT)

டாஸ்மாக் கடைகள் நாளை (வியாழக்கிழமை) திறக்கப்படுகின்றன. இதையொட்டி, கடைகளில் மதுபிரியர்கள் சமூக இடைவெளி கடைபிடிக்கும் வகையில் வட்டம் போடும் பணி தீவிரமாக நடக்கிறது.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அன்று முதல் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் மதுப்பிரியர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளானார்கள். இதனால் மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே சட்ட விரோத சாராய விற்பனை தொடங்கியது. போலீசார் தொடர்ந்து சாராய ஊறல்களை பிடித்து அழித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக அரசு நாளை (வியாழக்கிழமை) முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி அளித்து உள்ளது. இதனால் மதுப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

டாஸ்மாக் கடைகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் 145 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் நோய் கட்டுப்பாட்டு மண்டலமாக தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு உள்ள பகுதிகளில் அமைந்திருக்கும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. மாவட்ட கலெக்டரின் அறிவுரையின்படி பாதுகாப்பான மற்ற டாஸ்மாக் கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, டாஸ்மாக் கடைகள் அனைத்தும் நேற்று முதல் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. கடைகளின் முன்பு தடுப்பு கம்புகள் கட்டப்பட்டு வருகின்றன. அதேபோன்று சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்கான தடுப்புகள், வட்டங்கள் போடும் பணிகளும் நடந்து வருகின்றன. இந்த பணிகள் முடிக்கப்பட்ட பிறகு, ஏற்கனவே கடைகளில் இருந்து காலி செய்து குடோன்களில் வைக்கப்பட்டு உள்ள மதுபானங்கள் அனைத்தும் இன்று (புதன்கிழமை) அந்தந்த டாஸ்மாக் கடைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படுகின்றன.

நெல்லை-தென்காசி

நெல்லை மாவட்டத்தை பொறுத்த வரை 96 டாஸ்மாக் கடைகளும், தென்காசி மாவட்டத்தில் 69 என மொத்தம் 165 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இதில் மேலப்பாளையம், புளியங்குடி, சிவகிரி உள்ளிட்ட கட்டுப்பாடுகள் உள்ள பகுதிகளில் இருக்கும் 8 கடைகள் தவிர மற்ற கடைகள் நாளை திறக்கப்படுகின் றன. இந்த கடைகளில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் சவுக்கு கம்பால் தடுப்புகள் கட்டும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. மதுபாட்டில் வாங்க வருகிறவர்கள் 6 அடி இடைவெளி விட்டு நிற்கும் வகையில் வட்டம் போடும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

போலீஸ் பாதுகாப்பு

பார் செயல்படாது என்பதால் கவுண்ட்டரில் மட்டுமே மது பாட்டில்கள் வழங்கப்படும். கூட்டம் அதிகமாக இருந்தால், முதலில் நிற்கும் 50 பேருக்கு டோக்கன் வழங்கி விட்டு மற்றவர்களை வெளியேற்றி மது விற்பனை செய்யப்படும். கட்டுக்கடங்காமல் கூட்டம் இருந்தால் உடனடியாக கடையை மூடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அந்த கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்பும் கோரப்பட்டு உள்ளது.

இதுதவிர கடையில் பணிபுரியும் மேற்பார்வையாளர், விற்பனையாளர்கள் முககவசம், கையுறை அணிந்து வியாபாரத்தை கவனிக்க வேண்டும். கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் கையில் ‘சானிடைசர்‘ ஊற்றி உள்ளே அனுப்பி வைக்கப்படுவார்கள். சமூக இடைவெளி, பாதுகாப்பு அம்சங்களுடன் மட்டுமே கடைகளில் மது விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story