தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வீட்டிற்கே சென்று வழங்க வேண்டும்


தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வீட்டிற்கே சென்று வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 6 May 2020 3:24 AM IST (Updated: 6 May 2020 3:24 AM IST)
t-max-icont-min-icon

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வீட்டிற்கே சென்று வழங்க வேண்டும் என்று பொறுப்பு அலுவலர்களுக்கு கலெக்டர் அண்ணாதுரை உத்தரவிட்டுள்ளார்.

விக்கிரவாண்டி,

விக்கிரவாண்டி ஒன்றியத்திற்குட்பட்ட தும்பூர், கஸ்பாகாரணை, பூண்டி மற்றும் கோலியனூர் ஒன்றியத்திற்குட்பட்ட கண்டமானடி, திருப்பாச்சனூர் ஆகிய ஊராட்சி பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை நேற்று காலை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது கொரோனா பாதிக்கப்பட்ட இடங்களில் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளதா? கிருமி நாசினி திரவம் தெளிக்கப்படுகிறதா என்றும் ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து பாதிப்புக்குள்ளான பகுதிகளில் பொறுப்பு அலுவலராக கிராம நிர்வாக அலுவலர், சுகாதார ஆய்வாளர், ஊராட்சி உதவியாளர் ஆகியோர் மூலம் அப்பகுதி முழுமையாக கண்காணிக்கப்படுகிறதா? எனவும் பார்வையிட்டார். மேலும் கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்ட நபரின் வீட்டில் வசிப்பவர்கள் அப்பகுதியில் வசிக்கும் நபர்களிடம் பேசுவதற்கும், தெருக்களில் உலா வருவதற்கும், கடை வீதிகளுக்கு செல்வதற்கும் அனுமதியில்லை.

அறிவுரை

எனவே பொதுமக்கள், வீட்டை விட்டு வெளியே வராதவாறு கண்காணிக்கும்படி பொறுப்பு அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தியதோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் உடனுக்குடன் அவரவர் வீட்டிற்கே சென்று வழங்குமாறும் உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், விக்கிரவாண்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நந்தகோபாலகிருஷ்ணன், எழிலரசு, வட்டார மருத்துவ அலுவலர் வினோத், கோலியனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story