செங்கல்பட்டு மாவட்டத்தில் பெண் டாக்டர், கம்ப்யூட்டர் என்ஜினீயர் உள்பட 38 பேர் கொரோனாவால் பாதிப்பு


செங்கல்பட்டு மாவட்டத்தில் பெண் டாக்டர், கம்ப்யூட்டர் என்ஜினீயர் உள்பட 38 பேர் கொரோனாவால் பாதிப்பு
x
தினத்தந்தி 6 May 2020 4:30 AM IST (Updated: 6 May 2020 3:32 AM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்டத்தில் பெண் டாக்டர், கம்ப்யூட்டர் என்ஜினீயர் உள்பட 38 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ஆலந்தூர், 

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் நகரில் வசிக்கும் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றும் பெண் டாக்டருக்கு நேற்று கொரோனா தொற்று இருப்பது உறுதியானதால் அவர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவர் வசித்த பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு தடுப்பு வேலிகளை மாநகராட்சி அதிகாரிகள் அமைத்தனர்.

அதேபோல் நந்தம்பாக்கம் சுந்தர் நகரில் தனியாக வசித்து வந்த ஆந்திராவைச் சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர், ஊரடங்கால் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் விடுதியில் உணவு சாப்பிட்டு வந்தார். கடந்த சில நாட்களாக அவருக்கு தொடர்ந்து காய்ச்சல் ஏற்பட்டதால் மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது தெரிந்தது. அவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

பரங்கிமலை பல்லாவரம் கண்டோன்மெண்ட் போர்டு பகுதிக்கு உட்பட்ட நசரத்புரத்தில் இதுவரை 12 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று மேலும் 18 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது தெரிந்தது. 18 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

மேற்கு தாம்பரம், ரங்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்த 26 வயதான மின்வாரிய ஊழியர், கே.கே.நகர் மின் நிலையத்தில் டிரைவராக உள்ளார். அங்கு பணிபுரிந்த ஊழியருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதியானதால் அவருடன் பணிபுரிந்த அனைவரும், மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதில், ரங்கநாதபுரத்தைச் சேர்ந்த இவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

பீர்க்கன்காரணை பவானி தெருவைச் சேர்ந்த 50 வயது பெண் ஒருவர், தாம்பரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக உள்ளார். அவருக்கு சில தினங்களாக காய்ச்சல் இருந்து வந்தது. தொடர்ந்து, மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

மேற்கு தாம்பரம் திருநீர்மலை சாலையை சேர்ந்த 71 வயது மூதாட்டி ஒருவர் 4 நாட்களுக்கு முன்பு பழைய பெருங்களத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் உடல் நலம் சரிஇல்லாமல் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ரத்த பரிசோதனை செய்ததில் கொரோனா உறுதியானது.

பம்மலில் 3 பேருக்கு

ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்த 26 வயது வாலிபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவருடைய தாயார் மாநகராட்சி ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். மாம்பலத்தில் கொரோனா ஒழிப்பு பணியில் தன்னார்வலராக பணியாற்றிய வாலிபர் வேலை பார்த்தபோது கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

பல்லாவரம் அடுத்த பம்மல் அண்ணாநகரில் காய்கறி வியாபாரி, அவருடைய மனைவி மற்றும் குழந்தை என ஒரே வீட்டில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர், கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து தினமும் காய்கறி வாங்கி வந்து விற்பனை செய்துவந்தார். அதன் மூலம் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது தெரிந்தது.

நந்திவரம்-கூடுவாஞ்சேரி

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் உள்ள நந்திவரம் ராணி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த 24 வயது கர்ப்பிணி, பிரசவத்திற்காக பொத்தேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். நேற்று அதிகாலை அவருக்கு குழந்தை பிறந்தது. முன்னதாக அவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது.

இதே போல ஊரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள அய்யஞ்சேரி எம்.ஐ.டி.நகர் பகுதியில் 34 வயது வாலிபர் அதே பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். தினமும் கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து காய்கறிகளை வாங்கி வந்து வியாபாரம் செய்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் கொரோனா பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது.

சாலைகளுக்கு சீல்

இதேபோல கூடுவாஞ்சேரியில் உள்ள பெரியார் ராமசாமி தெருவில் வசித்து வரும் 50 வயது பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. ஏற்கனவே அப்பகுதியில் சாலையோரமாக காய்கறி விற்கும் 70 வயது மூதாட்டிக்கும் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மறைமலைநகர் நகராட்சியில் உள்ள வல்லாஞ்சேரி சிவாஜி நகரில் வசிக்கும் சென்னை துறைமுக ஒப்பந்ததாரருக்கு கொரோனா உறுதியாகி ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். நேற்று அவரது குடும்பத்தினருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டதுடன், ஜி.எஸ்.டி. சாலையிலிருந்து வல்லாஞ்சேரி செல்லும் சாலை உள்பட 5 சாலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

வண்டலூர் ஊராட்சியில் உள்ள காமராஜர் தெருவை சேர்ந்த 30 வயது காய்கறி வியாபாரிக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதியான நிலையில் அவருடைய குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் காய்கறி வியாபாரியின் 65 வயதான தந்தைக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது.

இது தவிர மதுராந்தம் பகுதியில் 5 பேர் உள்பட செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 38 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் மூலம் மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 136 ஆனது.

Next Story