சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கக்கோரி மாமல்லபுரம் வருவாய்த்துறை அலுவலகத்தில் திரண்ட வடமாநில தொழிலாளர்கள்


சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கக்கோரி மாமல்லபுரம் வருவாய்த்துறை அலுவலகத்தில் திரண்ட வடமாநில தொழிலாளர்கள்
x
தினத்தந்தி 6 May 2020 3:45 AM IST (Updated: 6 May 2020 3:33 AM IST)
t-max-icont-min-icon

தங்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கக்கோரி மாமல்லபுரம் வருவாய்த்துறை அலுவலகத்தில் சமூக விலகலை கடைபிடிக்காமல் வடமாநில தொழிலாளர்கள் திரண்டனர்.

மாமல்லபுரம், 

மாமல்லபுரம் கிழக்கு கடற்கரைசாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலையில் ஏராளமான கட்டுமான நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஓட்டல்கள் உள்ளன. இங்கு பீகார், உத்தரபிரதேசம், ஒடிசா, குஜராத், மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம், அரியானா உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவி வருவதால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக கட்டுமான நிறுவனங்கள், தொழிற்சாலைகள் இயங்காததால் தங்கள் வாழ்வாதாரம் இழந்த வட மாநில தொழிலாளர்கள் பலர் உணவின்றி தவித்து வருகின்றனர்.

ஒரு சில தொண்டு நிறுவனங்கள் அவர்களுக்கு உணவு வழங்கி வருகின்றன. 3 வேளை உணவு கிடைத்தாலும் தங்கள் கை செலவுக்கு போதிய வருமானம் இல்லாததால் இவர்கள் பரிதாபத்திற்குரிய நிலையில் உள்ளனர்.

இந்த நிலையில் அவர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். பஸ்கள், ரெயில்கள் இயங்காததால் அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க முடியாமல் வருவாய்த்துறையினர் திணறி வந்தனர்.

திரண்டனர்

இந்த நிலையில் நேற்று மாமல்லபுரம் வருவாய்த்துறை அலுவலகத்தில் வட மாநிலங்களுக்கு செல்ல அனுமதி பாஸ் வழங்குவதாக தகவல் பரவியது. இதையடுத்து வட மாநில தொழிலாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர் சமூக விலகலை கடைபிடிக்காமல் ஒன்றாக திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த மாமல்லபுரம் சரக உதவி போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உத்தரவின் பேரில் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன், சப்-இன்ஸ்பெக்டர் சதாசிவம், வருவாய் ஆய்வாளர் ஜேம்ஸ் உள்ளிட்ட அதிகாரிகள், போலீசார் கொண்ட குழுவினர் அவர்களை தனித்தனியாக நிற்கவைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஏற்பாடு செய்வதாக உறுதி

ஆன்லைனில் ஆதார் அட்டை விவரத்துடன் விண்ணப்பிக்குமாறு அவர்களுக்கு அறிவுறுத்தினர். பின்னர் தமிழக அரசுக்கு இது குறித்த விவரத்தை தெரிவித்து சிறப்பு பஸ்கள் மூலம் அவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்ததையடுத்து வடமாநில தொழிலாளர்கள் அங்குள்ள கம்ப்யூட்டர் சென்டரில் ஆன்லைன் மூலம் தங்கள் விவரங்களை ஆதார் அட்டை விவரத்துடன் பதிவு செய்து விட்டு கலைந்து சென்றனர்.

ஒரே நேரத்தில் வட மாநில தொழிலாளர்கள் திரண்டதால் மாமல்லபுரம் வருவாய்த்துறை அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து செல்லாமல் கங்கை கொண்டான் மண்டபம் அருகில் சமூகவிலகலை பின்பற்றாமலும், முக கவசம் அணியாமலும் கூட்டம், கூட்டமாக நின்றனர். மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன் மற்றும் போலீசார் அங்கு சென்று மீண்டும் எச்சரித்ததையடுத்து அவர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

பரனூர் சுங்கச்சாவடி

இதே போன்று நேற்று காலை செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கச்சாவடியில் 50-க்கும் மேற்பட்ட வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் திடீரென ஒன்று கூடி தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். தாங்கள் சொந்த ஊருக்கு செல்ல உதவி செய்யும்படி அங்கு பணியில் இருந்த போலீஸ் அதிகாரியிடம் முறையிட்டனர்.

அவர் வட மாநிலத்தவர்களை சமூக இடைவெளியுடன் நிற்க வைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருவாய்துறை அதிகாரியை சந்திக்கும்படி அறிவுரை வழங்கினார். பட்டினியால் தவித்த அவர்களுக்கு போலீசார் உணவு வழங்கி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

Next Story