சொந்த ஊருக்கு செல்ல சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு தண்டவாளத்தில் நடந்து வந்த 350 வடமாநில தொழிலாளர்கள் - போலீசார் மடக்கி பிடித்தனர்


சொந்த ஊருக்கு செல்ல சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு தண்டவாளத்தில் நடந்து வந்த 350 வடமாநில தொழிலாளர்கள் - போலீசார் மடக்கி பிடித்தனர்
x
தினத்தந்தி 6 May 2020 4:00 AM IST (Updated: 6 May 2020 3:51 AM IST)
t-max-icont-min-icon

சொந்த ஊர் செல்வதற்காக சென்டிரல் ரெயில் நிலையம் நோக்கி தண்டவாளத்தில் நடந்து வந்த 350-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்களை போலீசார் மடக்கி பிடித்து மீட்டனர்.

திருவொற்றியூர், 

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீட்டுக்குள் முடங்கி உள்ளனர். இதனால் பிழைப்பு தேடி தமிழகம் வந்த வடமாநில தொழிலாளர்கள் வேலை இன்றியும், சொந்த ஊருக்கு செல்ல முடியாமலும் தவித்தனர்.

இந்தநிலையில் மீஞ்சூரை அடுத்த அத்திபட்டு புதுநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்த ஜார்கண்ட், மேற்கு வங்காளம் போன்ற வடமாநிலங்களைச் சேர்ந்த சுமார் 350-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேற்று காலை சொந்த ஊர் செல்வதற்காக சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் நோக்கி தண்டவாளம் வழியாகவே மூட்டை முடிச்சுகளுடன் நடந்து வந்தனர்.

போலீசார் மீட்டனர்

எர்ணாவூர் மேம்பாலம் அருகே தண்டவாளத்தில் நடந்து வந்த அவர்களை எண்ணூர் போலீசார் மடக்கிப்பிடித்து மீஞ்சூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். மூன்று லாரிகள் மூலம் மீஞ்சூர் அழைத்துச்செல்லப்பட்ட அவர்கள் தற்காலிக குடியிருப்புகளில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

கிண்டியில் இருந்து...

அதேபோல் நேற்று முன்தினம் இரவு கிண்டியில் தங்கியிருந்த பீகார் மற்றும் ஆந்திர மாநிலங்களை சேர்ந்த வடமாநில தொழிலாளர்கள் 60-க்கும் மேற்பட்டோர் கிண்டியில் இருந்து நடைபயணமாக தங்களது சொந்த ஊருக்கு செல்ல சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பார்த்தசாரதி மேம்பாலம் வரை நடந்து வந்தனர். அவர்களை வண்ணாரப்பேட்டை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர்கள், ஊரடங்கால் வேலை இன்றி பசி, பட்டினியுடன் தவிப்பதால் சொந்த ஊருக்கு நடந்தே செல்வதாக கூறினர்.

இதையடுத்து வண்ணாரப்பேட்டை போலீஸ் உதவி கமிஷனர் ஜூலியஸ் சீசர் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் அவர்கள் அனைவருக்கும் உணவு பொட்டலங்கள் சாப்பிட கொடுத்தனர். பின்னர் அனைவரையும் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறிய போலீசார், அனைவரையும் மீண்டும் அவரவர்கள் தங்கி இருந்த கிண்டி பகுதிக்கு போலீஸ் வாகனங்கள் மூலம் அழைத்துச் சென்று தங்க வைத்தனர்.

Next Story