சொந்த ஊர் செல்ல வடமாநில தொழிலாளர்கள் ஆர்வம் 40 ஆயிரம் பேர் ஆன்லைனில் பதிவு


சொந்த ஊர் செல்ல வடமாநில தொழிலாளர்கள் ஆர்வம் 40 ஆயிரம் பேர் ஆன்லைனில் பதிவு
x

சொந்த ஊர் செல்ல வடமாநில தொழிலாளர்கள் ஆர்வமாக உள்ளனர். மேலும் 40 ஆயிரம்பேர் ஆன்லைனில் பதிவு செய்துள்ளதாக கலெக்டர் ராஜாமணி தெரிவித்து உள்ளார்.

கோவை,

கோவை எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, ஒண்டிபுதூர், நீலிகோணம்பாளையம் ஆகிய பகுதிகளில் வட மாநிலங்களான பீகார், ஒடிசா, மத்திய பிரதேசம், ஜார்கண்ட், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த சுமார் 750 கூலித்தொழிலாளர்கள் இங்குள்ள பஞ்சு குடோன், கேஸ்டிங் கம்பெனிகள் போன்றவற்றில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பினால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் இவர்கள் தற்போது சொந்த ஊர்களுக்கு திரும்பி செல்ல வேண்டி சரியான விவரம் தெரியாமல் போலீஸ் நிலையம், ரெயில் நிலையம், பஸ் நிலையங்களுக்கு சென்றனர்.

மேலும் சட்டவிரோதமாக லாரிகளில், இருசக்கர வாகனங்களிலும், சாலைகளில் நடந்தும் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல ஆர்வமாக உள்ளனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் துணை கமிஷனர் பாலாஜி சரவணன் தலைமையில் கோவை மாநகர உதவி கமிஷனர் சோமசுந்தரம் மற்றும் சிங்காநல்லூர் இன்ஸ்பெக்டர் முனீஸ்வரன், சப்-இன்ஸ்பெக்டர் அர்ஜுன் குமார் ஆகியோர் எஸ்.ஐ.எச்.எஸ். காலனி மகாத்மா காந்தி ரோட்டில் உள்ள காலியிடத்துக்கு வடமாநில தொழிலாளர்களை வரவழைத்தனர்.

40 ஆயிரம் பேர்

பின்னர் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய, மாநில அரசுகள் செய்து வருவதாகவும், பாதுகாப்பாக சொந்த ஊர்களுக்கு செல்ல கோவை மாநகர காவல்துறை துணை இருக்கும் என்றும் உறுதி அளிக்கப்பட்டது. மேலும், சொந்த ஊருக்கு செல்ல விரும்பும் பணியாளர்கள். https://nonresidenttamil.org/ இணையதளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி கூறும்போது, கோவை மாவட்டத்தில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல 40 ஆயிரம் வடமாநில தொழிலாளர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர். இணையதளம் மூலம் தொடர்ந்து பதிவு செய்யலாம். உரிய ஆய்வு செய்து சிறப்பு ரெயில் வருகையை பொறுத்து அவர்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Next Story