போலீஸ் துணை கமிஷனரின் பாதுகாப்பு அதிகாரி-டிரைவருக்கு கொரோனா


போலீஸ் துணை கமிஷனரின் பாதுகாப்பு அதிகாரி-டிரைவருக்கு கொரோனா
x
தினத்தந்தி 5 May 2020 10:43 PM GMT (Updated: 2020-05-06T04:13:27+05:30)

சென்னை போலீசில் துணை போலீஸ் கமிஷனரின் பாதுகாப்பு அதிகாரி மற்றும் அவரது டிரைவருக்கும் கொரோனா தாக்குதல் தொடுத்துள்ளது.

சென்னை, 

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் சென்னை போலீசில் அதிகரித்து வருகிறது. அண்ணாநகர் துணை போலீஸ் கமிஷனர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் நேற்று ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நேற்று அவரது பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றிய போலீஸ்காரர் மற்றும் அவரது டிரைவராக பணிபுரிந்த போலீஸ்காரர் ஆகியோர் கொரோனா தொற்றில் சிக்கினார்கள். திருவல்லிக்கேணி போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

டி.ஜி.பி. அலுவலகத்தில் பணியாற்றிய துப்புரவு பெண் பணியாளர்கள் 3 பேர் மற்றும் அமைச்சுப்பணியாளர் ஒருவர் என 4 பேரை நேற்று கொரோனா தாக்கியது. நேற்று ஒரே நாளில் 7 பேர் பாதிப்புக்குள்ளானார்கள். இதனால் சென்னை போலீசில் கொரோனாவின் கொடிய தாக்குதலுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்தது. இதில் டி.ஜி.பி.அலுவலகத்தில் மட்டும் 8 பேர் உள்ளனர்.

பீதிக்குள்ளான போலீஸ் துறை

கொரோனாவின் கோர தாண்டவத்தால் சென்னை போலீஸ் துறை பீதிக்குள்ளாகி உள்ளது. உயிரை பணயம் வைத்து பணிபுரிவதாக போலீசார் சொல்கிறார்கள். சென்னையில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் தினமும் வாகன சோதனை நடக்கிறது. 200-க்கும் மேற்பட்ட கொரோனா பாதிக்கப்பட்ட தெருக்கள் உள்ளன. இங்கு போலீசார் பணிபுரிகிறார்கள்.

‘சீல்’ வைக்கப்பட்ட கொரோனா தெருக்களில் பணிபுரியும் போலீசார் தினமும் சவால்களை சந்திக்கும் நிலை உள்ளது. அங்கு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட பொதுமக்கள் போலீசாரிடம் சண்டை பிடிக்கிறார்கள். ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. போலீசாரை தள்ளி விட்டு, விட்டு வெளியில் செல்கிறார்கள். இதை கண்டித்தால் போலீசார் மீது எச்சில் துப்பி மிரட்டுகிறார்கள். இதனால் தினமும் மன வேதனையுடன் கடமைக்காக பணியாற்றுகிறோம், என்று போலீசார் நொந்து போய் சொல்கிறார்கள். இறைவன், கொரோனா அரக்கனை விரட்டி, எங்களையும் காப்பாற்ற வேண்டும் என்பது போலீசாரின் வேண்டுதலாக உள்ளது.

தானியங்கி எந்திரம்

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. முக கவசம் அணியாமல் யாரும் கமிஷனர் அலுவலகத்திற்குள் போக அனுமதி இல்லை. கமிஷனர் அலுவலக வாசலில் கைகழுவும் தானியங்கி எந்திரம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இதை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று முறைப்படி தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் கூடுதல் கமிஷனர் ஜெயராம், துணை கமிஷனர்கள் திருநாவுக்கரசு, டாக்டர் சுதாகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story