மண்டபம் கடல் நீர் நிறம் மாறுகிறது - விஞ்ஞானி விளக்கம்


மண்டபம் கடல் நீர் நிறம் மாறுகிறது - விஞ்ஞானி விளக்கம்
x
தினத்தந்தி 6 May 2020 4:15 AM IST (Updated: 6 May 2020 4:15 AM IST)
t-max-icont-min-icon

மண்டபத்தில் கடல் நீர் நிறம் மாறி வருகிறது. அதற்கான காரணம் குறித்து விஞ்ஞானி விளக்கம் அளித்தார்.

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் தென் கடல் பகுதியில் கடந்த சில நாட்களாகவே கடல் நீர் நிறம் மாறி வருகிறது. காந்திநகர் முதல் மண்டபம் மற்றும் வேதாளை வரையிலான கடல் பகுதியில் இந்த நிற மாற்றம் காணப்படுகிறது. இந்த பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது.

இதுகுறித்து மண்டபத்தில் உள்ள மத்திய கடல்மீன் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் பார்வையிட்டு கடல் நீரை சேகரித்து பரிசோதனை செய்து வருகின்றனர்.

இதுபற்றி மண்டபம் மரைக்காயர் பட்டினத்தில் உள்ள மத்திய கடல்மீன் ஆராய்ச்சி நிலைய தலைமை விஞ்ஞானி ஜெயக்குமார் கூறியதாவது:-

கடந்த 3 நாட்களாகவே மண்டபம் முதல் வேதாளை வரையிலான கடல் பகுதியில் இந்த பாசி படர்ந்து கடல் நீர் நிறம் மாறி வருகிறது. இது குறித்து ஆய்வு நடத்தி வருகிறோம். கடல் நீரில் பூங்கோறை என்று சொல்லக் கூடிய ஒரு வகையான பாசியின் விதைகள் அதிக அளவில் படர்ந்துள்ளதே கடல் நீர் நிறம் மாற முக்கிய காரணம்.

ஆண்டுதோறும் மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை மன்னார் வளைகுடா கடலில் பூங்கோறை என்ற கடல் பாசி வளரும் சீசனாகும்.இந்த சீசனில் ஆழ்கடலில் கடலின் அடியில் வளர்ந்து நிற்கும் இந்த பூங்கோறை பாசி கடல் நீரில் முழுவதுமாக படர்ந்து கரையை ஒட்டியுள்ள கடல் நீர் வரை படரும். காற்றின் வேகம் மற்றும் கடல் நீரோட்டம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் இந்த பாசியும் கண்ணுக்கு தெரியாமல் அப்படியே அழிந்துபோகும். ஆனால் தற்போது கடலில் அலை, நீரோட்டம் இல்லாமல் அமைதியாக காணப்பட்டு வருவதால், கடலில் படர்ந்துள்ள பாசி தெளிவாக தெரிகிறது.

காற்று சீசன் வர உள்ளதால் இன்னும் ஓரிரு வாரத்தில் இந்த பாசி அனைத்தும் இயற்கையாகவே அழிந்து கரை ஒதுங்கி விடும். கடலும் வழக்கமான நிலைக்கு வந்து விடும். கடலில் படர்ந்துள்ள பாசிகளால் கரையை ஒட்டியுள்ள பாறை மற்றும் கடல் பகுதிகளில் மீன்கள் எதுவும் தங்காது. அதாவது, இந்த பாசியினால் கரையை ஒட்டியுள்ள கடலில் மீன்கள் நீந்த முடியாமல் திணறும்.அதனால் கரையை ஒட்டியுள்ள அனைத்து மீன்களும் ஆழ்கடல் பகுதிக்கு இடம் பெயர்ந்து செல்லும். இந்தபாசியினால் மீன்களுக்கு எந்த ஒரு பெரிய பாதிப்பும் கிடையாது. இது போன்ற நிகழ்வு ஆண்டு தோறும் நடப்பது தான்.இதனால் மீனவர்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story