கொரோனா பரவலை தடுக்க கோயம்பேடு மார்க்கெட் மூடல்: திருமழிசையில் காய்கறி அங்காடிகள் அமைக்கும் பணி தீவிரம்


கொரோனா பரவலை தடுக்க கோயம்பேடு மார்க்கெட் மூடல்: திருமழிசையில் காய்கறி அங்காடிகள் அமைக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 6 May 2020 4:45 AM IST (Updated: 6 May 2020 4:26 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரவலை தடுக்க கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டதால் திருமழிசையில் தற்காலிக காய்கறி அங்காடி அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பூந்தமல்லி, 

ரோனா வைரசின் தாக்கம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் காய்கறி விற்பனை சந்தையான கோயம்பேடு மார்க்கெட் கொரோனோ விற்பனை சந்தையாக மாறியதுதான்.

கொரோனாவின் தாக்கம் அதிகரிப்பதை தடுக்கவும், பொதுமக்களின் நலன் கருதியும் நேற்று முதல் கோயம்பேடு மார்க்கெட் தற்காலிகமாக மூடப்பட்டது.

பொதுமக்கள் வசதிக்காகவும், விவசாயிகளுக்காகவும் சென்னை பூந்தமல்லியை அடுத்த திருமழிசையில் உள்ள துணைக்கோள் நகரத்தில் தற்காலிக காய்கறி மொத்த விற்பனை அங்காடி நாளை (வியாழக்கிழமை) முதல் செயல்படும் என சென்னை கோயம்பேடு மார்க்கெட் அங்காடி நிர்வாகக்குழு அறிவித்தது.

அரசு அதிகாரிகள் ஆய்வு

இதையடுத்து திருமழிசையில் வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான 100 ஏக்கர் பரப்பளவில் பொக்லைன் எந்திரங்கள் கொண்டு சீரமைப்பு பணி நடந்து கொண்டிருக்கிறது. 10 அடி இடைவெளியில் கடைகள் அமைக்கப்பட இருக்கிறது. ஒரு கடைக்கு 200 சதுர அடி ஒதுக்கப்படுகிறது. ஒரு வரிசையில் 35 கடைகள் என முதல்கட்டமாக 100 கடைகள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த வளாகத்தில் காவல்துறை சார்பில் 9 கண்காணிப்பு கோபுரங்களும், 3 சோதனை சாவடிகளும் அமைக்கப்படும் என்று தெரியவந்துள்ளது.

இதற்கிடையே திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை திட்ட அதிகாரி லோகநாயகி உள்ளிட்ட அதிகாரிகள் அந்த இடத்தில் ஆய்வு செய்தனர். பின்னர் தற்காலிக மார்க்கெட் அமைப்பதற்காக 10-க்கும் மேற்பட்ட பொக்லைன் எந்திரம் கொண்டு அந்த இடங்களை சமன் செய்யும் பணி நடந்து வருகிறது.

20-க்கு 10 அடி என்ற அளவில் கடைகள் அமைக்க அளவீடு செய்து கடைகளுக்கான செட் மற்றும் மின் விளக்குகள் அமைப்பதற்கான பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு 2011-ம் ஆண்டு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட திருமழிசை துணைக்கோள் நகரம் சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் 311.05 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ளது.

பணிகள் தீவிரம்

தற்போது கோயம்பேடு தற்காலிக காய்கறி மார்க்கெட் அமைக்க சுமார் 20 முதல் 30 ஏக்கர் நிலப்பரப்பு சமன் செய்யும் பணியும், கடைகளுக்கு செட் அமைக்க இரும்புகம்பிகள், கான்கிரீட் கொண்டு அமைப்பது, மின் விளக்குகள், கழிவறை வசதிகள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தற்போது திருமழிசையில் கோயம்பேடு தற்காலிக மார்க்கெட் அமைய உள்ள இடம் பூந்தமல்லி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளதால் பெங்களூரு உள்ளிட்ட வெளிமாநிலங்கள் மற்றும் சென்னையில் இருந்து வருபவர்களுக்கு சுலபமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த வியாபாரம்

திருமழிசை காய்கறி அங்காடிகளில் மொத்த வியாபாரம் மட்டுமே நடக்கும் என்பதால் வியாபாரிகளை தவிர பொதுமக்கள் தனிப்பட்ட முறையில் வந்து காய்கறி வாங்க அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை கோயம்பேட்டில் இருந்தது போல கழிப்பறை, பணியாளர் தங்கும் அறை என அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும் என்று கோயம்பேடு காய்கறி வணிக வளாக அங்காடி சங்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன. சென்னையில் இருந்து 24 கி.மீ. தொலைவில் உள்ள திருமழிசையில் காய்கறி வாங்கி எடுத்து வருவது என்பது வியாபாரிகளுக்கு சவாலாகவே இருக்கப்போகிறது. அதேவேளை ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்து சரக்குகளை கொண்டு வந்து சேர்ப்பது இனி எளிதாகவே இருக்க போகிறது.

Next Story