கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க போலீசார் அடிக்கடி சானிடைசர் மூலம் கைகளை கழுவுங்கள் - மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர் ராவ் அறிவுரை


கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க போலீசார் அடிக்கடி சானிடைசர் மூலம் கைகளை கழுவுங்கள் - மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர் ராவ் அறிவுரை
x
தினத்தந்தி 5 May 2020 11:39 PM GMT (Updated: 2020-05-06T05:09:07+05:30)

பெங்களூருவில், கொரோனா வைரஸ் தங்களுக்கு பரவுவதை தடுக்க போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சானிடைசர் மூலம் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர் ராவ் அறிவுறுத்தி உள்ளார்.

பெங்களூரு, 

கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் முதோல் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த ஒரு போலீஸ்காரருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. இந்த நிலையில் பெங்களூரு பேகூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த ஒரு போலீஸ்காரருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதுவரை கர்நடகத்தில் கொரோனா வைரசுக்கு போலீஸ்காரர்கள் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பேகூர் போலீஸ்காரர், கொரோனா தடுப்பு பணிக்காக ஹொங்கசந்திராவுக்கு சென்றிருந்தபோது அவருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஹொங்கசந்திரா பகுதி ஏற்கனவே கொரோனா வைரஸ் அதிகம் பரவும் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதி ஆகும். அங்கு இதுவரை 30-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

போலீஸ் நிலையம் மூடப்படும்

கொரோனா பாதிப்புக்கு உள்ளான போலீஸ்காரரின் குடும்பத்தினர், அவருடன் தொடர்பில் இருந்த போலீஸ்காரர்கள் என இதுவரை 25 பேரை சுகாதார துறையினர் தனிமைப்படுத்தி வைத்துள்ளனர். வழக்கமாக போலீஸ்காரர்கள் யாருக்கும் கொரோனா பாதிப்போ, கொரோனா அறிகுறியோ இருந்தால் அவர்கள் பணியாற்றும் போலீஸ் நிலையம் உடனடியாக மூடப்படும்.

ஆனால் தற்போது கொரோனா பாதிப்புக்கு உள்ளான பேகூர் போலீஸ்காரருக்கு பெரும்பாலானோருடன் தொடர்பு இல்லை. அதனால் அவர் பணியாற்றிய போலீஸ் நிலையத்தை மூட வேண்டாம் என்று சுகாதார துறை அதிகாரிகள் கூறிவிட்டனர். இருப்பினும் அவர் பணியாற்றிய போலீஸ் நிலையத்தில் உள்ள அனைத்து போலீஸ்காரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

சானிடைசர் மூலம்...

இதற்கிடையே இதுபற்றி பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர் ராவ் கூறுகையில், “பெங்களூரு நகர போலீசார் தங்களுக்கு கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக கவசம் அணிந்து கொள்ள வேண்டும். மேலும் சானிடைசர் திரவம் மூலம் அடிக்கடி கைகளை கழுவிக் கொள்ள வேண்டும். பாதுகாப்பு பணியில் கவனமாக ஈடுபட வேண்டும். வாகன சோதனையில் ஈடுபட்டாலோ, கைதி யாரையும் பிடிக்க சென்றாலோ அல்லது யாரையும் சோதனையிட சென்றாலோ சமூக விலகலை கண்டிப்பாக பின்பற்றி இருக்க வேண்டும்“ என்று கூறினார்.

Next Story