சென்னையில் இருந்து தேனிக்கு வந்த இயக்குனர் பாரதிராஜாவுக்கு கொரோனா பரிசோதனை வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார்


சென்னையில் இருந்து தேனிக்கு வந்த இயக்குனர் பாரதிராஜாவுக்கு கொரோனா பரிசோதனை வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார்
x
தினத்தந்தி 6 May 2020 5:11 AM IST (Updated: 6 May 2020 5:11 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் இருந்து தேனிக்கு வந்த இயக்குனர் பாரதிராஜாவுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார்.

தேனி,

தமிழகத்தில் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் இருந்து தேனி மாவட்டத்துக்கு வரும் நபர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. அத்தகைய நபர்களுக்கு பாதிப்பு இல்லாதபட்சத்தில் வீட்டில் 28 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் சிவப்பு மண்டல பகுதியான சென்னையில் இருந்து, தேனி என்.ஆர்.டி. நகரில் உள்ள தனது வீட்டுக்கு திரைப்பட இயக்குனர் பாரதிராஜா கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்தார். அவருடன் அவருடைய உதவியாளர்கள் 3 பேரும் வந்துள்ளனர்.

இதையடுத்து இயக்குனர் பாரதிராஜா நேற்று முன்தினம் தானாக முன்வந்து தேனி நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றார். பின்னர் அவர், தான் சென்னையில் இருந்து தேனி வந்த விவரத்தை தெரிவித்தார். இதனையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்வதற்காக சளி மாதிரி சேகரிக்கப்பட்டது.

கொரோனா பரிசோதனை

மேலும் அவருடைய உதவியாளர்கள் 3 பேருக்கும் சளி மாதிரி சேகரிக்கப்பட்டது. இந்த மாதிரிகள், தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரியவந்துள்ளது.

இருப்பினும் இயக்குனர் பாரதிராஜா உள்பட 4 பேரும் வீட்டில் 28 நாட்களுக்கு தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு சுகாதாரத்துறையினர் கேட்டுக்கொண்டனர். அதை ஏற்றுக் கொண்ட பாரதிராஜா உள்பட 4 பேரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர். அவருடைய வீட்டின் முன்பு தனிமைப்படுத்தப்பட்ட வீடு என்ற நோட்டீசை தேனி அல்லிநகரம் நகராட்சி அதிகாரிகள் ஒட்டியுள்ளனர்.

Next Story