அனுமதி அளிக்கப்பட்ட தொழில், வணிக நிறுவனங்கள் செயல்படுவதற்கான விதிமுறைகள் - கலெக்டர் அறிவிப்பு


அனுமதி அளிக்கப்பட்ட தொழில், வணிக நிறுவனங்கள் செயல்படுவதற்கான விதிமுறைகள் - கலெக்டர் அறிவிப்பு
x
தினத்தந்தி 5 May 2020 11:49 PM GMT (Updated: 5 May 2020 11:49 PM GMT)

விருதுநகர் மாவட்டத்தில் எந்தெந்த வணிக நிறுவனங்கள், தொழில்கள் செயல்படலாம் என அறிவித்துள்ள மாவட்ட நிர்வாகம் அதற்கான விதிமுறைகளையும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கலெக்டர் கண்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் ஏற்கனவே மாவட்டம் முழுவதும் விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவும், ஊரடங்கு உத்தரவும் தொடர்ந்து அமலில் இருக்கும். பொதுமக்கள் அத்தியாவசிய தேவை, அலுவலக பணி மற்றும் அனுமதிக்கப்பட்ட தொழில் நிமிர்த்தம் தவிர பிற காரணங்களுக்காக வெளியில் வருவது முற்றிலும் தடை செய்யப்படுகிறது. பொது இடங்களில் 5 நபர்களுக்கு மேல் கூடக்கூடாது. சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். அனைவரும் முககவசம் கட்டாயம் அணிந்து இருக்க வேண்டும். கொரோனா நோய் தடுப்பு கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்ட இடங்களில் எவ்வித காரணங்களுக்காகவும் மக்கள் வெளியில் வருவது முற்றிலும் தடை செய்யப்படுகிறது. தடை உத்தரவை மீறுபவர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து பள்ளி, கல்லூரி, பயிற்சி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும். மத சம்பந்தமான கூட்டங்களுக்கு தடை நீடிக்கிறது. விளையாட்டு, பொழுது போக்கு உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. சினிமா தியேட்டர்கள், உடற் பயிற்சி நிலையங்கள், மால்கள், தங்கும் விடுதிகள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும். இறந்தவருக்கான இறுதி சடங்கில் 20 நபர்களுக்கு மேல் கலந்து கொள்ள கூடாது. திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகள் தொடரும். வாடகை கார்கள், ஆட்டோ இயங்குவது தொடர்ந்து தடை செய்யப்படுகிறது. பஸ் போக்குவரத்துக்கு அனுமதி இல்லை. இருப்பினும் அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் இயங்க தடை இல்லை. விவசாயம் மற்றும் அது தொடர்பான பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. அம்மா உணவகங்கள் தொடர்ந்து இயங்கும். அனைத்து வங்கிகளின் ஏ.டி.எம். தொடர்ந்து இயங்கும்.

வணிக நிறுவனங்கள்

கொரோனா நோய் தடுப்பு கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் எவ்வித காரணங்களுக்காகவும் எவ்வித கடைகளும் செயல்பட அனுமதி இல்லை. இதை மீறுபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் குளிரூட்டப்பட்ட ஜவுளி கடைகள், ஷோரூம்கள், டிபார்ட்மெண்டல் ஸ்டோர்கள், வணிக வளாகங்கள் செயல்பட அனுமதி இல்லை. டீக்கடைகள், சலூன் கடைகள், அழகு நிலையங்களை திறக்கக்கூடாது. ஒரே இடத்தில் அமைந்துள்ள கடைகள், வளாகங்களில் உள்ள கடைகள் திறக்க அனுமதி இல்லை. ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்கள் தொடர்பான கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம். உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் பார்சல் விற்பனை செய்வதற்காக காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனுமதி. அனைத்து பகுதியில் உள்ள கட்டுமான பொருட்கள், மின்சாதனங்கள் விற்பனை கடைகள், மொபைல் போன், கம்ப்யூட்டர், வீட்டு உபயோக பொருட்கள், மோட்டார் வாகனங்கள், கண் கண்ணாடி தொடர்பான கடைகள் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் விண்ணப்பித்து அனுமதி பெற்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கலாம். இதர கடைகளுக்கு தற்போது அனுமதி இல்லை. சூழ்நிலைக்கேற்ப ஆய்வு செய்து அனுமதி வழங்கப்படும். கிராமங்களில் உள்ள அனைத்து தனி கடைகளும் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் அனுமதி பெற்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கலாம். கடைகளின் நுழைவு பகுதியில் வாடிக்கையாளர்கள் கை கழுவ ஏற்பாடு செய்ய வேண்டும். முககவசம் அணிந்த வாடிக்கையாளர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும். கடையில் அனைத்து பணியாளர்களும் முககவசம் அணிய வேண்டும். கடையின் வெளியே வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியுடன் நின்று பொருட்களை வாங்கி செல்லும் வகையில் தரையில் கோடுகள் வரைந்து இருக்க வேண்டும். இதனை கடையின் உரிமையாளர்களே கண்காணிக்க வேண்டும். இதனை மீறும் கடைகளின் அனுமதி ரத்து செய்யப்பட்டு பூட்டப்படும். அனைத்து பகுதிகளில் உள்ள தனித்திறன் பெற்ற பிளம்பர்கள், எலக்ட்ரீஷியன்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையாளர் அலுவலகத்தில் அடையாள அட்டை பெற்றுக்கொள்ள வேண்டும்.

பட்டாசு ஆலைகள்

மாவட்டத்தில் நகராட்சி பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகள், கொரோனா நோய் தொற்று காரணமாக தடை செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகள் செயல்பட அனுமதி இல்லை. கிராமப்பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகள் 50 சதவீதம் பணியாளர்களுடன் உரிய அலுவலரிடம் தகவல் தெரிவித்து பட்டாசு தொழில் தொடர்பான விதிகளுக்கு உட்பட்டு செயல்படலாம். ஊரக பகுதியில் உள்ள அனைத்து பட்டாசு ஆலைகளும் தொழில் தொடங்குவதற்கு முன்னர் தொழிலாளர்கள் விவரங்கள், தொழிற்சாலை உரிமம் பெற்ற விவரங்கள், பணிபுரிய உள்ள பணியாளர்களின் எண்ணிக்கை, பணியாளர்கள் எங்கிருந்து அழைத்து வரப்படுகிறார்கள் என்ற விவரம் ஆகியவற்றை சிவகாசி தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் தகவல் தெரிவித்து பணி தொடங்க வேண்டும். தொழிலாளர்களுக்கான வாகனங்களுக்கு உரிய அடையாள அட்டைபெற வேண்டும். தொழிற்சாலைகளில் மூலப்பொருட்கள் வழங்குவதற்கு நகர்ப்புறங்களில் உள்ள தனி கடைகள் இயங்க அனுமதிக்கப்படுகிறது. இதற்கு துணை ஆட்சியர் நிலையில் உள்ள அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களில் தீப்பெட்டி தொழிலுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. தடை செய்யப்பட்ட பகுதியில் அனுமதி இல்லை. இவர்கள் தங்களது தீப்பெட்டி ஆலை அமைவிடம், பணியாளர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை சிவகாசி தனி வட்டாட்சியரிடம் தெரிவிக்க வேண்டும். பணியாளர்கள் வாகனத்துக்கு கலெக்டர் அலுவலகத்தில் அடையாள அட்டை பெற வேண்டும். கிராமப்பகுதி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் 50 சதவீத பணியாளர்களுடன் குறைந்தபட்சம் 20 பேருடன் அச்சகங்கள் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. தடை செய்யப்பட்ட பகுதிகளில் அனுமதி இல்லை. அனைத்து அச்சகங்களும் தொழில்கள் தொடங்குவதற்கு முன்னர் தொழிற்சாலை மற்றும் பணியாளர் விவரங்களை கலெக்டர் அலுவலகத்தில் தெரிவித்து அனுமதி பெற வேண்டும். வாகனங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் அடையாள அட்டை பெற்றுக்கொள்ளலாம்.

சிறு, குறு நிறுவனங்கள்

மாவட்டத்தில் கிராமங்கள் மற்றும் பேரூராட்சி பகுதியில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் உரிய அலுவலரிடம் அனுமதி பெற்று 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம். தடை செய்யப்பட்ட பகுதியில் அனுமதி இல்லை. நகராட்சி பகுதிகளில் ஏற்கனவே இயங்கி கொண்டு இருக்கும் அத்தியாவசிய பொருட்கள் உற்பத்தி தொடர்பான நிறுவனங்கள் தவிர இதர தொழிற்சாலைகள் இயங்க அனுமதி இல்லை. மாவட்டத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செட்டியார்பட்டி, காரியாபட்டி, வத்திராயிருப்பு, மம்சாபுரம் பேரூராட்சி பகுதிகளில் ஜவுளித்துறை தொழிற்சாலைகள் தொடங்க கலெக்டரிடம் அனுமதி பெற வேண்டும். ஊரக பகுதிகளில் உள்ள 280-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை கொண்டு இயங்கும் பெரிய தொழிற்சாலைகள் அனைத்துக்கும் மாவட்ட தொழில் மைய மேலாளரிடம் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும். ஊரக மற்றும் பேரூராட்சி பகுதியில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் விவரங்கள், வங்கி கணக்கு மற்றும் பி.எப். கணக்கு ஆகியவற்றை அந்தந்த தாலுகா அலுவலகத்தில் தெரிவித்து அனுமதி பெற வேண்டும். நகராட்சி பகுதியில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெற வேண்டும்.

தடுப்பு நடைமுறைகள்

பட்டாசு, தீப்பெட்டி, அச்சகங்கள் இன்னும் பிற நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களை வாகனங்களில் அழைத்து வர வேண்டும். 55 வயதுக்கு மேற்பட்டவர்களை தவிர்க்க வேண்டும். தொழிற்சாலைகளில் மருத்துவ உடல் தகுதி இல்லாதவர்கள் மற்றும் காய்ச்சல், மூச்சுவிட சிரமப்படுபவர்களை பணியமர்த்த கூடாது. பணிக்காக தங்கள் வீடுகளில் இருந்து கிளம்பியது முதல் பணி முடிந்து வீடு திரும்பும் வரை தொழிலாளர்கள் தங்களது அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும். தொழிற்சாலைக்குள் நுழையும் முன்பு கைகழுவ வேண்டும். சமூக இடைவெளியுடன் பணி செய்ய வேண்டும். தொழிற்சாலையின் அனைத்து பகுதிகளிலும் காலை உணவு இடைவேளையின் போதும் மற்றும் மாலையிலும் கிருமிநாசினி தெளிக்க வேண்டும். தொழிற்சாலையின் அருகில் உள்ள மருத்துவமனையின் விவரம் மற்றும் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்ஆகியவற்றை தொழிலாளர்களுக்கு தெரியும் வகையில் எழுதி வைக்க வேண்டும்.

நடவடிக்கை

மேற்கண்ட கடைகள், தொழிற்சாலைகள், நிறுவனங்கள் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையை பின்பற்ற தவறும் பட்சத்தில் இந்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை தொடர்புடைய மேலாண்மைத்தலைவர் மற்றும் துணை கலெக்டர் ரத்து செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. வணிக நிறுவனங்கள் திறந்து இருக்கும் நேரங்களை மாற்றி அமைப்பது உள்ளிட்ட தேவைப்படும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மேலாண்மை தலைவர் மற்றும் துணை கலெக்டர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறைகளை பின்பற்றி கொரோனா பரவலை தடுக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டுகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Next Story