ரேஷன் அரிசியை அரைத்து விற்பனை செய்த ஆலைக்கு சீல் - 224 மாவு மூடைகளுடன் லாரி பறிமுதல்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ரேஷன் அரிசியை அரைத்து மாவாக விற்பனை செய்து வந்த அரிசி அரவை ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் 224 மாவு மூடைகளுடன் லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இடையபொட்டல் தெருவில் தனியாருக்கு சொந்தமான அரிசி அரவை ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையை மகாலிங்கம் என்பவர் கடந்த சில ஆண்டுகளாக வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். ஆலையில் ரேஷன் அரிசியை கடத்தி வந்து அவற்றை மாவாக அரைத்து கடைகளுக்கு விற்பனை செய்யப்படுவதாக ஸ்ரீவில்லிபுத்தூர் தாசில்தார் கிருஷ்ணவேணிக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தாசில்தார், வருவாய் ஆய்வாளர் பால்துரை மற்றும் வருவாய் துறையினர் ஆலையை சோதனை செய்தனர்.
அப்போது கடைகளுக்கு கொண்டு செல்வதற்காக 224 மாவு மூடைகளுடன் தயார் நிலையில் ஒரு லாரி நின்றது. அதிகாரிகள் அந்த மூடைகளில் சோதனை செய்தனர். அதில் ரேஷன் அரிசியை அரைத்து மாவாக மூடை போட்டு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அரவை ஆலையில் நடத்தப்பட்ட சோதனையில் அரசு முத்திரை பதித்த 80 சாக்கு பைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரியில் இருந்த 224 மூடைகளுடன் லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள் அரசு முத்திரை பதித்த சாக்கு பைகளையும் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து அரவை ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் இதுகுறித்து ஆலையை நடத்தி வரும் மாகாலிங்கத்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story