மாவட்ட எல்லை அடைக்கப்பட்டதால் தொழிலாளர்கள் பணிக்கு வரமுடியாமல் தவிப்பு
ஊரடங்கு உத்தரவில் கட்டுமான தொழிலுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. மாவட்ட எல்லை அடைக்கப்பட்டதால் தொழிலாளர்கள் பணிக்கு வரமுடியாமல் தவித்து வருகின்றனர்.
காரைக்குடி,
காரைக்குடி அருகே ஆத்தங்குடி பகுதியில் பாரம்பரிய மிக்க வகையில் வீடுகளில் பதிக்கும் டைல்ஸ் தயாரிக்கும் கம்பெனிகள் உள்ளன. இந்த கம்பெனிகளில் டைல்ஸ் தயாரிக்கும் பணியில் சுமார் 300 முதல் 400 பேர் வரை வேலை செய்து வருகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் டைல்ஸ்கள் மிகவும் அழகானதாகவும் இருப்பது மட்டுமல்லாமல் அவற்றால் எவ்வித பக்க விளைவும் இல்லாதது மற்றொரு தனிச்சிறப்பாக இருந்து வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் டைல்ஸ்களுக்கு தேவையான மூலப்பொருட்கள் இந்த பகுதியில் அதிகமாகவும், தரமானதாக கிடைப்பதால் இங்கு தயாரிக்கப்படும் இந்த டைல்ஸ் போன்று வேறு எங்கும் தயாரிக்க முடியாது.
மேலும் இங்குள்ள மண் மற்றும் தண்ணீர் ஆகியவை தனித்தன்மையாக இருப்பதால் இங்கு தயாரிக்கப்படும் இந்த டைல்ஸ்கள் தரமானதாகவும், அனைவரையும் எளிதில் கவரும் வகையில் உள்ளது. இந்த டைல்ஸ் தயாரிக்கும் பணிக்கு இங்குள்ள வாரி என்று அழைக்கப்படும் ஒரு வகை மண்ணை சேர்ப்பதால் இந்த டைல்ஸ் பதிக்கும் வீடுகளில் கோடைகாலத்தில் குளுமையாகவும், குளிர்காலத்தில் வெதுவெதுப்பாகவும் இருக்கும். ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் இங்கு தயாரிக்கப்பட்ட சுமார் 2 ஆயிரம் டன் டைல்ஸ்கள் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலத்திற்கு ஏற்றுமதி செய்ய முடியாமல் தேக்க நிலையில் இருந்தது.
இதுதவிர இந்த தொழிலில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வேலை இல்லாததால் கடுமையான வறுமையில் இருந்து வந்தனர். இந்தநிலையில் ஊரடங்கில் கட்டுமான தொழிலுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. இந்த பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் பெரும்பாலும் புதுக்கோட்டை மாவட்ட பகுதியில் இருந்து வருவது வழக்கம். தற்போது ஆத்தங்குடி அருகே புதுக்கோட்டை மாவட்டம் கோனாப்பட்டு பகுதிக்கு முன்பாக மாவட்ட எல்லையான பழைய ஆத்தங்குடி பகுதியில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டதால் அந்த பகுதியில் இருந்து வரும் தொழிலாளர்கள் வர முடியாமல் தற்போது இந்த தொழில் மேலும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்த பணி மீண்டும் மந்தமான நிலையில் தொடங்கி உள்ளது.
இதுகுறித்து இந்த பகுதியில் டைல்ஸ் தயாரிக்கும் கம்பெனி வைத்து நடத்தி வரும் உரிமையாளர் பெத்ராஜ் கூறியதாவது:- ஆத்தங்குடியில் 40-க்கும் மேற்பட்ட டைல்ஸ் தயாரிக்கும் கம்பெனிகள் உள்ளன. இங்கு தயாரிக்கப்படும் இந்த டைல்ஸ் உலகம் முழுவதும் பெயர் பெற்றதாக விளங்கி வருகிறது. இந்த பணியில் ஆத்தங்குடி, காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து வரவேண்டிய 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிவகங்கை மாவட்ட எல்லையான பழைய ஆத்தங்குடி பகுதியில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளதால் அவர்கள் அங்கிருந்து வரமுடியாமல் தவித்து வருகின்றனர்.
இதனால் தற்போது கம்பெனியில் மொத்தம் 6 தொழிலாளர்களை கொண்டு வேலை செய்து வருகிறேன். இந்த பாதையை திறந்து விட்டால் தான் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து தொழிலாளர்கள் இங்கு வந்து இந்த பணியை பார்க்க முடியும். எனவே மாவட்ட நிர்வாகம் அடைக்கப்பட்ட எல்லை பாதை பகுதியை திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story