மத்திய அரசு பயண செலவை முழுமையாக ஏற்று வெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்ப வேண்டும் - சித்தராமையா வலியுறுத்தல்
மத்திய அரசு பயண செலவை முழுமையாக ஏற்று வெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்ப வேண்டும் என்று சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கட்டணம் வசூலித்தது
வெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்புவது மற்றும் வெளிமாநிலங்களில் உள்ளவர்களை கர்நாடகத்திற்கு அழைப்பதில் மத்திய-மாநில அரசுகள் நடந்து கொள்ளும் விதம் மிக மோசமாக உள்ளது. இந்த தொழிலாளர்களின் பயண செலவை மத்திய-மாநில அரசுகளே ஏற்க வேண்டும்.
வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்கள் அரசுகளிடம் இல்லை. வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள கன்னடர்களை பாதுகாப்பாக அழைத்து வர நடவடிக்கை எடுக்கும்படி தலைமை செயலாளரிடம் நாங்கள் கடிதம் கொடுத்துள்ளோம். பெங்களூருவில் உள்ள வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல மாநில அரசு கட்டணம் நிர்ணயித்து வசூலித்தது.
பயண செலவுக்கு ரூ.1 கோடி
எங்கள் கட்சியின் தலைவர் டி.கே.சிவக்குமார், தொழிலாளர்களின் பஸ் பயண செலவுக்கு ரூ.1 கோடி கொடுப்பதாக அறிவித்தார். அதன் பிறகு கர்நாடக அரசு விழிப்படைந்து, பயண கட்டணத்தை ரத்து செய்தது. இப்போது வெளிமாநில தொழிலாளர்களை அழைத்து செல்ல, கன்னடர்களை அழைத்து வர ஆகும் பயண செலவுக்கு மாநில அரசிடம் மத்திய அரசு பணம் கேட்கிறது.
ரெயில்வே துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதனால் வெளிமாநில தொழிலாளர்களை அழைத்து செல்ல ஆகும் பயண செலவை மத்திய அரசே முழுமையாக ஏற்க வேண்டும். வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை அரசு சொந்த செலவில் விமானத்தில் அழைத்து வருகிறது.
கண்ணீர் வருகிறது
ஆனால் உள்நாட்டில் உள்ள தொழிலாளர்களை சொந்த செலவில் அவர்களின் ஊருக்கு அனுப்ப தயங்குவது ஏன்?. கர்நாடகத்தை சேர்ந்த தொழில் நிறுவனங்கள், சி.எஸ்.ஆர். நிதியின் கீழ் பிரதமரின் கேர் நிதிக்கு ரூ.1,500 கோடி கொடுத்துள்ளனர். அதில் சிறிது தொழிலாளர்களுக்காக செலவு செய்வதில் மத்திய அரசுக்கு என்ன கஷ்டம் உள்ளது.
எந்த குழப்பத்திற்கும் இடம் கொடுக்காமல் மத்திய அரசு பயண செலவை முழுமையாக ஏற்று வெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்ப வேண்டும். வெளிமாவட்ட தொழிலாளர்களை கர்நாடக அரசு அலைகழிக்கிறது. மெஜஸ்டிக்கில் இருந்து அரண்மனை மைதானத்திற்கும், அங்கிருந்து பீனியாவுக்கும் என்று அங்குமிங்கும் வரும்படி சொல்கிறது. இதனால் தொழிலாளர்கள் தங்களின் பைகளை தூக்கி கொண்டு அலைந்து திரிய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதை பார்க்கும்போது கண்ணீர் வருகிறது. இந்த மாநில அரசுக்கு இதயமே இல்லை.
ரூ.35 ஆயிரம் கோடி
மாவட்டம் வாரியாக பிரித்து தொழிலாளர்களுக்கு பஸ் நிலையம் ஒதுக்குவதில் அரசுக்கு என்ன பிரச்சினை உள்ளது.வெளிமாநில தொழிலாளர்களை சரியான முறையில் அரசு நிர்வகிக்கவில்லை. தொழிலாளர்களின் பயணத்திற்கு ரூ.3 கோடி செலவாகும். இதை தாங்கும் சக்தி அரசுக்கு இல்லையா?. முதல்-மந்திரியின் நிவாரண நிதிக்கு இதுவரை எவ்வளவு நிதி வந்துள்ளது என்பது பற்றி அரசு பகிரங்கப்படுத்தவில்லை.
பிரதமரின் கேர் நிதிக்கு இதுவரை ரூ.35 ஆயிரம் கோடி வந்துள்ளது. இதில் வெளிமாநில தொழிலாளர்களை அவர்களின் சொந்த ஊருக்கு அழைத்து செல்ல ரூ.60 கோடி செலவாகும். இது பெரிய தொகை ஒன்றும் இல்லை. இது மக்களின் பணம். பிரதமர் தன்னிடம் வைத்துக்கொள்ள இவ்வளவு பணத்தை மக்கள் கொடுக்கவில்லை. முதல்-மந்திரியை நேரில் சந்தித்து இதுபற்றி பேச முடிவு செய்துள்ளேன்.”
இவ்வாறு சித்தராமையா கூறினார்.
Related Tags :
Next Story