வளர்ச்சி பணிகள் பாதிக்கும் அபாயம்: வெளிமாநில தொழிலாளர்களுக்கு எடியூரப்பா உருக்கமான வேண்டுகோள் - ‘சொந்த ஊருக்கு திரும்பி செல்ல வேண்டாம்’


வளர்ச்சி பணிகள் பாதிக்கும் அபாயம்: வெளிமாநில தொழிலாளர்களுக்கு எடியூரப்பா உருக்கமான வேண்டுகோள் - ‘சொந்த ஊருக்கு திரும்பி செல்ல வேண்டாம்’
x
தினத்தந்தி 6 May 2020 5:57 AM IST (Updated: 6 May 2020 5:57 AM IST)
t-max-icont-min-icon

வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி சென்றுவிட்டால் கர்நாடகத்தில் வளர்ச்சி பணிகள் பாதிக்கும் அபாயம் உள்ளது. இந்த நிலையில் “இருகரம் கூப்பி கேட்கிறேன். சொந்த ஊருக்கு திரும்பி செல்ல வேண்டாம்” என்று வெளி மாநில தொழிலாளர்களுக்கு எடியூரப்பா உருக்கமான வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

பெங்களூரு,

கொரோனா பரவலை கட்டுப் படுத்த நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது.

ஊரடங்கு காரணமாக பஸ், ரெயில் மற்றும் விமான போக்குவரவத்து நிறுத்தப்பட்டது. தொழில் நிறுவனங்கள் செயல்படவில்லை. கட்டுமான பணிகளும் நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக வெளிமாநிலங்களில் இருந்து பெரு நகரங்களுக்கு பிழைப்பு தேடி வந்த தொழிலாளர்கள் வேலை இல்லாமலும் அதே நேரத்தில் தங்களின் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமலும் ஆங்காங்கே முடங்கி கிடந்தனர்.

அதோடு நீண்ட நாட்கள் வேலை இல்லாமலும் உணவுக்கும் கஷ்டப்பட்டு வந்தனர். அதனால் தங்களை சொந்த ஊருக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். இது தொடர்பாக சில இடங்களில் போராட்டமும் நடைபெற்றது. இந்த நிலையில் பல்வேறு மாநிலங்களில் சிக்கி தவிக்கும் வெளிமாநில தொழிலாளர்களை அந்தந்த மாநில அரசுகள் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு கடந்த 29-ந் தேதி அறிவித்தது. அதனை தொடர்ந்து வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

பெங்களூருவில் இருந்து ராஜஸ்தான், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் சொந்த ஊர்களுக்கு செல்ல வெளிமாநில தொழிலாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். இந்த நிலையில் கர்நாடகத்தில் நேற்று முன்தினம் ஊரடங்கு தளர்த்தப்பட்டு இயல்பு நிலை திரும்பி வருகிறது. தொழில், வணிக நிறுவனங்கள் செயல்பட தொடங்கி உள்ளன.

இந்த சூழ்நிலையில் கட்டுமான தொழில் நிறுவன உரிமையாளர்களுடன் முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில், கட்டுமான பணிகளை மீண்டும் தொடங்குவது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

“கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் கட்டுக்குள் உள்ளது. சிவப்பு மண்டலங்களை தவிர மற்ற பகுதிகளில் வணிகம், தொழில், கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த சூழ்நிலையில் வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டாம் என்று இருகரம் கூப்பி வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

மந்திரிகளுக்கு உத்தரவு

அந்த தொழிலாளர்களுக்கு ஊரடங்கு காலத்தில் தேவையான உணவு, தங்கும் வசதியை செய்து கொடுத்ததாக கட்டுமான நிறுவன அதிபர்கள் தெரிவித்தனர். அதனால் தொழிலாளர்கள், வதந்திகளை நம்பாமல், ஏற்கனவே வேலை செய்த இடங்களில் பணியை தொடர வேண்டும். அவசரப்பட்டு சொந்த ஊருக்கு திரும்ப வேண்டாம்.

இங்கேயே இருந்து எப்போதும் போலவே வேலை செய்ய வேண்டும். எந்த தொந்தரவுகள் இருந்தாலும் அதை சரிசெய்ய அரசு தயாராக உள்ளது. தொழிலாளர்கள் அதிகம் பேர் இதை நம்பி மீண்டும் பணியில் ஈடுபட ஒப்புக்கொண்டுள்ளனர். சொந்த ஊருக்கு திரும்பும் மனநிலையில் உள்ள தொழிலாளர்களுடன் பேசி அவர்களை சமாதானப்படுத்த மந்திரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

சில உதவிகள்

தனியார் நிறுவனங்களுக்கு குறைந்த வாடகையில் பஸ்களை வழங்க பி.எம்.டி.சி. முன் வந்துள்ளது. நெசவாளர்களுடனும் ஆலோசனை நடத்தினேன். நிதித்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து அவர்களுக்கு சில உதவிகளை செய்ய அரசு முடிவு செய்துள்ளது. அதை விரைவில் அறிவிக்க இருக்கிறேன்.”

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

வளர்ச்சி பணிகள் பாதிப்பு

பெங்களூருவில் மெட்ரோ ரெயில் பணிகள், கட்டுமான பணிகள், ஓட்டல்கள், தொழில் நிறுவனங்களில் பெரும்பாலும் வெளிமாநில தொழிலாளர்களே அதிக அளவில் வேலை செய்கிறார்கள். தற்போது ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டு பணிகள் தொடங்கி உள்ள நிலையில் இந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றுவிட்டால் கர்நாடகத்தில் வளர்ச்சி பணிகள் பாதிக்கும் அபாயம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டே முதல்-மந்திரி எடியூரப்பா வெளி மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டாம் என்று நேற்று 2-வது முறையாக உருக்கமான வேண்டு கோள் விடுத்து உள்ளார்.

Next Story