ஊரடங்கு நீட்டிப்பால் குமரி வழியாக படையெடுக்கும் கேரள மக்கள் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு


ஊரடங்கு நீட்டிப்பால் குமரி வழியாக படையெடுக்கும் கேரள மக்கள் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 6 May 2020 6:43 AM IST (Updated: 6 May 2020 6:43 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு நீட்டிப்பால் குமரி வழியாக சென்ற கேரள மக்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

களியக்காவிளை,

ஊரடங்கு நீட்டிப்பால் குமரி வழியாக சென்ற கேரள மக்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

எல்லையில் நடந்த இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

ஊரடங்கு நீட்டிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது 3-ம் கட்டமாக வருகிற 17-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அத்தியாவசிய தேவைகளுக்காக ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு செல்ல அனுமதி சீட்டு வாங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக -கேரள எல்லையான களியக்காவிளையில் போலீசார் சோதனை சாவடிகள் அமைத்து வாகன போக்குவரத்தை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். முறையாக அனுமதி சீட்டு பெற்ற வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் புலம் பெயர்ந்து வாழ்ந்து வரும் மக்கள் குடும்பத்துடன் தங்களது சொந்த ஊருக்கு திரும்பிய வண்ணம் உள்ளனர்.

தடுத்து நிறுத்தம்

பெங்களூரு, சென்னை, கோவை போன்ற பகுதிகளில் குடும்பத்துடன் வசித்து வந்த கேரள மக்கள் குமரி மாவட்டம் வழியாக கார்களில் தங்களின் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர். அவர்கள் நேற்று காலையில் களியக்காவிளை சோதனை சாவடியில் சென்ற போது அங்கு பணியில் இருந்த போலீசார் உரிய அனுமதி சீட்டு இல்லாததால் தடுத்து நிறுத்தினர். இவ்வாறு நேற்று காலை 10 மணி முதல் 11 மணி வரை சுமார் 15-க்கும் மேற்பட்ட கார்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விளவங்கோடு தாசில்தார் ராஜ் மனோகரன், களியக்காவிளை இன்ஸ்பெக்டர் சொர்ணலதா மற்றும் அதிகாரிகள் சோதனை சாவடிக்கு சென்று கார்களில் வந்தவர்களிடம் முறையாக அனுமதி சீட்டு இருந்தால் மட்டுமே கேரளாவுக்கு அனுமதிக்க முடியும் என கூறினர். இதையடுத்து கார்கள் அனைத்தும் சாலையோரம் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டன. காரில் இருந்த குழந்தைகள், பெண்கள் என 45 பேர் செய்வதறியாமல் பரிதவித்தனர்.

எம்.எல்.ஏ.க்கள் பேச்சுவார்த்தை

இதற்கிடையே காரில் இருந்தவர்கள் தங்களின் நிலை குறித்து கேரளாவில் உள்ள உறவினர்களுக்கும், பாறசாலை எம்.எல்.ஏ.வுக்கும் தகவல் கொடுத்தனர். பாறசாலை எம்.எல்.ஏ. ஹரிகரன் களியக்காவிளை பகுதிக்கு விரைந்து சென்று கேரள மக்களை அனுப்பி வைக்குமாறு அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், முறையான அனுமதி சீட்டு இருந்தால் மட்டுமே அனுமதிக்க முடியும் என தமிழக அதிகாரிகள் உறுதியாக இருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கிள்ளியூர் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார், குளச்சல் எம்.எல்.ஏ. பிரின்ஸ் ஆகியோர்களியக்காவிளை சோதனை சாவடிக்கு சென்றனர். தொடர்ந்து, தமிழக, கேரள எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இதில் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி மதியம் 3 மணியளவில் கார்களை கேரளாவுக்கு செல்ல அனுமதித்தனர். இதையடுத்து அனைவரின் விவரங்களையும் எழுதி வாங்கிவிட்டு பாறசாலை எம்.எல்.ஏ. ஹரிகரனுடன் கேரளாவுக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன், இதுகுறித்து கேரள சுகாதாரதுறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் களியக்காவிளை சோதனை சாவடியில் சுமார் 5 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story