கொரோனாவால் கோயம்பேட்டை தொடர்ந்து நெல்லை நயினார்குளம் காய்கறி மார்க்கெட்டுக்கும் ‘சீல்’ வைப்பு


கொரோனாவால் கோயம்பேட்டை தொடர்ந்து நெல்லை நயினார்குளம் காய்கறி மார்க்கெட்டுக்கும் ‘சீல்’ வைப்பு
x
தினத்தந்தி 6 May 2020 8:00 AM IST (Updated: 6 May 2020 7:29 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கோயம்பேடு மார்க்கெட்டை தொடர்ந்து நெல்லை நயினார்குளம் காய்கறி மார்க்கெட்டுக்கும் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக ‘சீல்‘ வைத்தனர்.

நெல்லை, 

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கோயம்பேடு மார்க்கெட்டை தொடர்ந்து நெல்லை நயினார்குளம் காய்கறி மார்க்கெட்டுக்கும் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக ‘சீல்‘ வைத்தனர்.

மார்க்கெட் கடைகள்

சென்னை கோயம்பேடு மார்க்கெட் மூலம் கொரோனா வைரஸ் பரவியதால், அந்த மார்க்கெட்டுக்கு அதிகாரிகள் ‘சீல்‘ வைத்தனர். இதையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து காய்கறி மார்க்கெட்டுகளையும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.

நெல்லையில் ஏற்கனவே டவுன் மற்றும் பாளையங்கோட்டை மார்க்கெட்டுகள் மூடப்பட்டன. அதற்கு பதிலாக பல்வேறு இடங்களில் தற்காலிக காய்கறி கடைகள் அமைக்கப்பட்டன. பொதுமக்கள் அங்கு சென்று காய்கறிகளை வாங்கிச்செல்கிறார்கள்.

இதேபோல் நெல்லை டவுன் நயினார்குளம் மொத்த காய்கறி மார்க்கெட் வளாகத்தில் இருந்த சில்லறை விற்பனை கடைகள் அனைத்தும் சாப்டர் மேல்நிலைப்பள்ளி மைதானத்துக்கு மாற்றப்பட்டது.

கடைகளை மாற்ற உத்தரவு

அங்கு 30 மொத்த வியாபார கடைகள் செயல்பட்டு வந்தன. இங்கு நெல்லை மாவட்டம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து காய்கறிகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கோயம்பேடு மார்க்கெட் பிரச்சினை ஏற்பட்ட உடன், இந்த கடைகளை நெல்லை புதிய பஸ் நிலையம் மற்றும் பழைய பேட்டை லாரி முனையம் ஆகிய இடங்களுக்கு மாற்றுவதற்கு நெல்லை மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் உத்தரவிட்டார்.

ஆனால், கடைகளை மார்க்கெட் வளாகத்தில் உள்ள காலி இடங்களில் மாற்றி வைக்க வியாபாரிகள் அனுமதி கேட்டனர். வேறு இடத்துக்கு கொண்டு செல்வது சிரமத்தை ஏற்படுத்தும் என்று கூறி வந்தனர்.

மார்க்கெட்டுக்கு ‘சீல்‘ வைப்பு

இந்த நிலையில் நெல்லை மாநகராட்சி அதிகாரிகள், நெல்லை தாலுகா அலுவலக அலுவலர்கள் நேற்று காலை நயினார்குளம் மார்க்கெட்டுக்கு சென்றனர். அவர்கள் மார்க்கெட் வளாக இரும்பு கேட்டுகளை மூடி அதிரடியாக ‘சீல்‘ வைத்தனர். இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story