திருச்சி மாநகராட்சியில் கொரோனாவால் தடைபட்ட, பாதாள சாக்கடை பணி மீண்டும் தொடங்கியது


திருச்சி மாநகராட்சியில் கொரோனாவால் தடைபட்ட, பாதாள சாக்கடை பணி மீண்டும் தொடங்கியது
x
தினத்தந்தி 6 May 2020 9:17 AM IST (Updated: 6 May 2020 9:17 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாநகராட்சியில் கொரோனாவால் தடைபட்ட பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மீண்டும் தொடங்கியது.

திருச்சி, 

திருச்சி மாநகராட்சியில் கொரோனாவால் தடைபட்ட பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மீண்டும் தொடங்கியது.

பாதாள சாக்கடை திட்டம்

திருச்சி மாநகரில் ஏற்கனவே பழைய திருச்சி நகராட்சி பகுதி மற்றும் சில வார்டுகளில் புதைவடிகால் எனப்படும் பாதாள சாக்கடை திட்டம் அமலில் உள்ளது. அதன் மூலம் 35 ஆயிரம் வீடுகள் பாதாள சாக்கடை திட்ட இணைப்புகள் பெற்றுள்ளன. 2-ம் கட்டமாக பாதாள சாக்கடை திட்டம் 25 வார்டுகளில் நிறைவேற்றும் நோக்கில் ரூ.377 கோடியே 29 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இத்திட்டம் 3 தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, 2-ம் கட்டப் பணிகள் தொகுப்பு-2-ல் 19 வார்டுகளில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி ரூ.73 கோடியே 48 லட்சம் செலவில் தொடங்கப்பட்டன. இதில் 7,436 வீடுகள், 3,286 வணிக நிறுவனங்கள் என மொத்தம் 10,722 இணைப்புகள் வழங்கும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

66 கிலோ மீட்டருக்கு புதைவடிகால்

அதற்காக 66 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதைவடிகால் குழாய்கள், 12 கிலோ மீட்டர் நீளத்திற்கு உந்து குழாய்கள் பதிக்கப்பட்டு வருகிறது. மேலும் 12 இடங்களில் உந்து நிலையங்கள் (பம்பிங் ஸ்டேசன்) அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் 30 எம்.எல்.டி. கொள்ளளவு கொண்ட பழைய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களும் புனரமைக்கப்பட உள்ளது.

அடுத்ததாக தொகுப்பு-3 ல் 63-வது வார்டுக்குட்பட்ட கீழகல்கண்டார் கோட்டையில் புதிதாக 37 எம்.எல்.டி. கொள்ளளவு உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வழிவகை செய்யப்பட்டது. அங்கு அமைப்பதற்கு அப்பகுதியில் உள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பணிகள் அரைகுறையாக நிறுத்தப்பட்டது.

கொரோனாவால் நிறுத்தம்

இதர இடங்களில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் துரிதமாக நடைபெற்று வந்த வேளையில் உலகெங்கிலும் கொரோனா வைரசின் தாக்கம் தொடங்கியது. கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து திருச்சி மாநகராட்சி பகுதிகளில் நடந்து வந்த பாதாள சாக்கடை திட்டப்பணிகளும் முழுமையாக நிறுத்தப்பட்டன.

இந்த நிலையில் சமீபத்தில் கட்டுமான பணிக்கு தடையில்லை என்று அரசு அறிவித்தது. அதைத்தொடர்ந்து திருச்சி மாநகராட்சி பகுதியிலும் கொரோனாவால் நிறுத்தப்பட்ட பாதாள சாக்கடை திட்டப்பணிகள் தொடங்கியது. தற்போது கீழகல்கண்டார்கோட்டை பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் பாதாள சாக்கடை குழாய் அமைக்க குழிகள் தோண்டப்பட்டு வருகின்றன. மேலும் ஆங்காங்கே உந்து கழிவுநீர் தொட்டிகளும் அமைக்கும் பணியை தொழிலாளர்கள் மேற்கொண்டிருக்கிறார்கள்.

Next Story