கரூரில் ஊரடங்கால் தடைபட்ட சாலை அமைக்கும் பணி மீண்டும் தொடங்கியது


கரூரில் ஊரடங்கால் தடைபட்ட சாலை அமைக்கும் பணி மீண்டும் தொடங்கியது
x
தினத்தந்தி 6 May 2020 4:14 AM GMT (Updated: 2020-05-06T09:44:20+05:30)

கரூரில், ஊரடங்கால் தடைப்பட்டிருந்த சாலை அமைக்கும் பணி மீண்டும் தொடங்கியது.

கரூர்,

கரூரில், ஊரடங்கால் தடைப்பட்டிருந்த சாலை அமைக்கும் பணி மீண்டும் தொடங்கியது.

சாலை அமைக்க கோரிக்கை

கரூர் நகரில் டெக்ஸ்டைல், கொசுவலை உற்பத்தி, பஸ் கூண்டு கட்டுதல் உள்ளிட்ட தொழில்கள் சிறப்புற்று விளங்குவதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமல்லாமல், வெளி மாவட்டங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கரூர் நகருக்கு வந்து செல்வார்கள். இதனால் கோவை ரோடு, செங்குந்தபுரம், காமராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், ரெயில் நிலையத்தில் இருந்து சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சாலைகளை இணைக்கும் வகையில், புதிய சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர்.

ஊரடங்கு உத்தரவு

இதையடுத்து கரூர் நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு, ரெயில் நிலையத்தில் இருந்து சேலம் தேசிய நெடுஞ்சாலை வரை ரூ.21.21 கோடி செலவில் அம்மா சாலை அமைக்கும் பணி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியது. இந்த சாலை 40 அடி அகலத்தில், 2.6 கி.மீ. நீளத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் மூன்று பாலங்களும் கட்டப்பட்டு வருகிறது. இப்பணி நிறைவுபெறும் போது, செங்குந்தபுரத்தில் உள்ள டெக்ஸ்டைல் நிறுவனத்திற்கு வரும் வாகனங்கள், சரக்கு வாகனங்கள் உள்ளிட்டவை சேலம் நெடுஞ்சாலையில் இருந்து நேரடியாக அப்பகுதிக்குள் செல்ல முடியும்.

மேலும் வெங்கமேடு, வாங்கப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சேலம், நாமக்கல் உள்ளிட்ட நகரங் களுக்கு செல்வதற்கும் இச்சாலையை பயன்படுத்து வதால் நகர் பகுதிக்குள் நெரிசல் குறையும். இந்த சாலை பணியானது கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் தடைப்பட்டது.

பணி தொடங்கியது

தற்போது அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளதால், மீண்டும் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து நகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், சாலை அமைக்கும் பணி கடந்த ஆண்டு தொடங்கி நடைபெற்று வந்தது. நிலம் கையகப்படுத்தும் பணியில் சில பிரச்சினைகள் இருந்ததால் பணிகள் மெதுவாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் பணி தடைபட்டது. தற்போது அத்தியாவசியப் பணிகளை தொடரலாம் என அரசு அனுமதி அளித்துள்ளதால் கடந்த 4 நாட் களாக சலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது என்றார்.

Next Story