குளித்தலையில் சோதனைச்சாவடி அமைத்து வெளிமாவட்டங்களில் இருந்து வருவோரை தீவிரமாக கண்காணிக்கும் போலீசார்
வெளிமாவட்டங்களில் இருந்து வருவோரை சோதனைச்சாவடி அமைத்து குளித்தலையில் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
குளித்தலை,
வெளிமாவட்டங்களில் இருந்து வருவோரை சோதனைச்சாவடி அமைத்து குளித்தலையில் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட் மூடப்பட்டது. அங்கு வேலைபார்த்து சொந்த ஊருக்கு திரும்பிய பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் சரக்கு வேன், லாரி டிரைவர்கள் பலருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இந்தநிலையில் கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் இருந்து சென்னை மற்றும் கோயம்பேடு மார்க்கெட்டிற்கு சரக்கு வேன், லாரிகள் ஓட்டிச்சென்று மீண்டும் குளித்தலைக்கு வந்த லாரி, வேன் டிரைவர்களையும் அவர்களுடன் சென்றுவந்த நபர்களையும் கண்டறியும் பணியில் போலீசார் மற்றும் மருத்துவக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். அதன்படி கடந்த இரண்டு நாட்களில் சுமார் 60-க்கும் மேற்பட்ட லாரி, வேன் டிரைவர்களை கண்டறிந்து அவர்களின் தொண்டை சளி மற்றும் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த டிரைவர்கள் தனித்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தீவிர சோதனை
அதேபோல சென்னை உள்பட வெளிமாவட்டங்களில் இருந்து, குளித்தலை எல்லை வழியாக கரூர் மாவட்டத்திற்கு வரும் அனைத்து நபர்களையும் சோதனை செய்ய மருதூர் பிரிவு சாலை, குளித்தலை-முசிறி சாலை ஆகிய பகுதிகளில் போலீசார் சோதனைச்சாவடி அமைத்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் மருத்துவக்குழுவினரும் உடன் இருந்து பணியாற்றி வருகின்றனர். அப்படி பிற மாவட்டங்களில் இருந்து கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் வந்தால் அவர்களின் முழுவிவரமும் சேகரிக்கப்படுகிறது. பின்னர் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அவர்கள் தங்கள் வீட்டிலேயே தனித்திருக்க மருத்துவக்குழுவினர் அறிவுறுத்திவருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் திருச்சி மாவட்டம் முசிறியில் இருந்து குளித்தலைக்கு வந்த இருவரை போலீசார் மற்றும் மருத்துவக்குழுவினர் விசாரித்தபோது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் சொன்னதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் மற்றும் மருத்துவக்குழுவினர் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவர்களின் சளி மற்றும் ரத்த மாதிரி எடுக்கப்பட்டது. பின்னர் அவர்கள் இருவரையும் மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை பிரிவில் அனுமதித்து கண்காணித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story