புதுக்கோட்டையில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட இடங்களில் கோடிக்கணக்கான ரூபாய் மதுபாட்டில்கள் மாயம் அதிகாரிகள் விசாரணை


புதுக்கோட்டையில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட இடங்களில் கோடிக்கணக்கான ரூபாய் மதுபாட்டில்கள் மாயம் அதிகாரிகள் விசாரணை
x
தினத்தந்தி 6 May 2020 4:59 AM GMT (Updated: 2020-05-06T10:29:41+05:30)

புதுக்கோட்டையில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட இடங்களில் கோடிக்கணக்கான ரூபாய் மதுபாட்டில்கள் மாயமானதாக கூறப்படுகிறது.

புதுக்கோட்டை, 

புதுக்கோட்டையில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட இடங்களில் கோடிக்கணக்கான ரூபாய் மதுபாட்டில்கள் மாயமானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டாஸ்மாக் கடைகள்

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமலாக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் கடந்த 40 நாட்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தில் 140-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன.

இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவின்போது கடைகள் மூடப்பட்டபின் 70 கடைகளில் இருந்து மதுபாட்டில்கள் டாஸ்மாக் குடோனுக்கு கொண்டு செல்லப் பட்டன. இதேபோல பாதுகாப்பு கருதி சில கடைகளில் இருந்த மதுபாட்டில்களை ஆங்காங்கே ஓரிரு திருமண மண்டபங்களில் அடுக்கி வைத்தனர்.

அதிகாரிகள் விசாரணை

கடை மூடப்பட்ட நாளில் மதுபான விற்பனை விவரங்களை உயர் அதிகாரிகளுக்கு விற்பனையாளர்கள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் டாஸ்மாக் கடையில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டு, பாதுகாக்கப்பட்ட இடங்களில் மதுபாட்டில்கள் சில மாயமானதாக கூறப்படுகிறது. அந்த மதுபாட்டில்களை ஊழியர்கள் சிலர், இடமாற்றம் செய்த போது முறைகேடாக விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதன் மதிப்பு கோடிக்கணக்கான ரூபாய் இருக்கலாம் எனக்கூறப்படுகிறது. இந்த நிலையில் டாஸ்மாக் கடை நாளை (வியாழக்கிழமை) திறக்கப்பட உள்ளதால் அதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுத்து வருகின்றனர்.

இதற்கிடையில் மதுபாட்டில்கள் மாயம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பந்தப்பட்ட கடை ஊழியர்களிடம் பணம் பிடித்தம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக டாஸ்மாக் நிர்வாக உயர்அதிகாரியை செல்போனில் தொடர்பு கொண்டபோது அவர் அழைப்பை ஏற்கவில்லை.

Next Story