பவானியில் இன்று மதுக்கடைகள் திறப்பு: மதுபிரியர்கள் குடையுடன் வர அறிவுறுத்த வேண்டும் - டாஸ்மாக் ஊழியர்களுக்கு போலீசார் வேண்டுகோள்


பவானியில் இன்று மதுக்கடைகள் திறப்பு: மதுபிரியர்கள் குடையுடன் வர அறிவுறுத்த வேண்டும் - டாஸ்மாக் ஊழியர்களுக்கு போலீசார் வேண்டுகோள்
x
தினத்தந்தி 7 May 2020 4:30 AM IST (Updated: 6 May 2020 10:29 PM IST)
t-max-icont-min-icon

பவானியில் இன்று மதுக்கடைகள் திறக்கப்படுவதையொட்டி மதுபிரியர்கள் குடையுடன் வர அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று டாஸ்மாக் ஊழியர்களுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

பவானி, 

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் இன்று (வியாழக்கிழமை) மது கடைகளை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்பேரில் ஈரோடு மாவட்டத்திலும் திறக்கப்படுகிறது. பவானி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இன்று முதல் மதுக்கடைகள் செயல்பட உள்ளது.

இதைத்தொடர்ந்து பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் டாஸ்மார்க் கடை மேற்பார்வையாளர்களை அழைத்து நேற்று கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட துணைபோலீஸ் சூப்பிரண்டு சேகர் தலைமை தாங்கினார். பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-

குடையுடன் வர வேண்டும்

மதுபிரியர்கள் முண்டியடித்துக்கொண்டு சமூக இடைவெளியை பின்பற்றாமல் மதுபானம் வாங்க முற்படுவர். எனவே டாஸ்மாக் ஊழியர்கள் மதுபிரியர்கள் கைகளில் குடையோடு மது கடைக்கு வர அறிவுறுத்த வேண்டும். அதிக அளவில் கூட்டம் இருக்கும் என்பதால் மது பிரியர்கள் கட்டாயம் குடை கொண்டு வருவது அவசியம். மதுபாட்டில் வாங்க வரும் பொழுது சமூக இடைவெளி விட்டு நிற்கும் வகையில் 5 அடிக்கு ஒருவரை நிற்க வைக்க வேண்டும். ஒவ்வொருவரும் கட்டாயம் முகக்கவசம் அணிவது இன்றியமையாதது. அதிகமான நபர் மதுக்கடையில் கூடக்கூடாது. தனிநபர் ஒருவருக்கு அதிகபட்சமாக 5 பாட்டில்கள் வரை மட்டுமே வழங்கிட வேண்டும். பைகளை கொண்டு வரக்கூடாது. மது கடையில் பணிபுரியும் ஊழியர்கள் அணைவரும் கைகளை கழுவ கிருமி நாசினி வைத்திருக்க வேண்டும் முகக் கவசம், கையுறை கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும்.

வயது அடிப்படையில்...

மேலும் 50 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையும் 40 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்கள் மதியம் 1 மணி முதல் 3 மணி வரையும் 40 வயதுக்கு குறைவாகவும் 18 வயதுக்கு மேலுள்ளவர்களுக்கும் மதியம் 3 மணி முதல் மாலை 5 மணி வரையும் மது வழங்கப்படும்.

பவானியில் உள்ள 2 மதுக்கடைகள் மற்றும் ஆப்பக்கூடல் மற்றும் அத்தாணியில் உள்ள ஒரு மதுக்கடையை திறக்க அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு துணை போலீஸ் சூப்பிரண்டு சேகர் கூறினார்.

Next Story