மாவட்டத்தில் புதிதாக கொரோனா பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்


மாவட்டத்தில் புதிதாக கொரோனா பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
x
தினத்தந்தி 6 May 2020 11:30 PM GMT (Updated: 2020-05-07T00:30:19+05:30)

தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக கொரோனா பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் 37-வது அமைப்பு தினத்தையொட்டி ரத்ததான முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி முகாமை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அரசு ஊழியர்கள் ரத்ததானம் செய்தனர். டாக்டர்கள் குழுவினர் ரத்தம் சேகரித்தனர்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் செந்தூர் ராஜன், மாவட்ட செயலாளர் முருகன், மாநில துணை தலைவர் வெங்கடேசன், மாவட்ட துணை தலைவர் அண்ணாமலை பரமசிவன், தாசில்தார்கள் செல்வகுமார் (தூத்துக்குடி), ஞானராஜ் (திருச்செந்தூர்) மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களிடம் கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக அரசின் வழிகாட்டுத லின்படி கொரோனா தொற்று பரவமால் தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரசால் 27 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 26 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். ஒரு மூதாட்டி மட்டும் இறந்து உள்ளார். அதன்பிறகு தினசரி சளி, காய்ச்சல் அறிகுறியுடன் உள்ள நபர்கள் கண்டறியப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் 10 நோய் கட்டுப்பாட்டு மண்டலங்கள் இருந்தன. இதில் 5 மண்டலங்களில் 28 நாட்கள் முடிவடைந்ததால், அந்த பகுதிகளில் படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகிறது.

பரிசோதனை

மேலும் வெளி மாநிலம், வெளி மாவட்டத்தில் இருந்து வரும் நபர்கள் கண்டறியப்பட்டு அவர்கள், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். குறிப்பாக கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் இருந்து 15 பேர் தூத்துக்குடிக்கு வந்ததாக தகவல் வந்து உள்ளது. இதில் 5 பேர் கண்டறியப்பட்டு வீட்டிலே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

இவர்களுக்கு அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படும். ஊரடங்கு காரணமாக பல்வேறு மாவட்டங்களில் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள ரத்தம் தேவையான அளவு கிடைக்காமல் உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு சிகிச்சைகள் மேற்கொள்ள அதிகமான ரத்தம் தேவைப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு ரத்ததான முகாம் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் ரத்த வங்கியில் தேவையான ரத்தம் இருப்பில் வைக்க முடியும்.

மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் தன்னார்வலர் மூலம் ரத்தானம் முகாம் நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று நோயினால் புதிதாக எந்த ஒரு நபரும் பாதிக்காத வகையில் மாவட்ட நிர்வாகம் மூலம் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story