தூத்துக்குடியில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம் - அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் நடந்தது


தூத்துக்குடியில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம் - அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 7 May 2020 4:30 AM IST (Updated: 7 May 2020 12:30 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம் அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் நடந்தது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தொற்று நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் எஸ்.பி.சண்முகநாதன், சின்னப்பன், மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் வெளி மாவட்டத்தில் இருந்து வருகிறவர்களை சோதனை சாவடி அருகில் உள்ள கல்லூரியை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். மேலும் அந்த இடத்தில் தேவையான உணவு மற்றும் தங்கும் வசதிகளை தயார்் நிலையில் வைத்து இருக்க வேண்டும். நோய் தடுப்பு கட்டுப்பாட்டு பகுதிகளில் தன்னார்வலர்கள் மூலம் இந்த பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு தடையின்றி உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். ஊரடங்கு உத்தரவு காலத்தில் பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பால கோபாலன், கூடுதல் கலெக்டர்(வருவாய்) விஷ்ணுசந்திரன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சத்யா, உதவி கலெக்டர் சிம்ரான் ஜீத் சிங் கலோன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பேட்டி

பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும், முக கவசங்களை அணிந்து வெளியே செல்ல வேண்டும், சோப்பினால் கைகளை அடிக்கடி கழுவ வேண்டும் என்று முதல்-அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். இதனை மக்கள் முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் நோய் கட்டுப்பாட்டு மண்டலங்கள் 28 நாட்கள் முடிந்த பிறகு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடி காய்கறிகள் வாங்குவதால் கொரோனா தொற்று நோய் ஏற்பட வாய்்ப்பு உள்ளது. இதனை கருத்தில்கொண்டு தற்காலிக காய்கறி கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. கொரோனா நிவாரணத்தொகை 99 சதவீதம் பேர் வாங்கி உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் அமைப்பு சாரா நல வாரியத்தில் உறுப்பினராக இல்லாத 24 ஆயிரத்து 864 பேருக்கு அரிசி, பருப்பு வழங்கபட்டு உள்ளது. பல்வேறு தரப்பினருக்கும் நிவாரண உதவி வழங்கப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 30 அம்மா உணவகம் மற்றும் சமுதாய கூடத்தின் மூலம் மொத்தம் 4 லட்சத்து 55 ஆயிரத்து 917 பேருக்கு இலவசமாக உணவுகள் வழங்கப்பட்டுள்ளது.

மீண்டும் கொரோனா

சென்னை கோயம்பேடு பகுதியில் இருந்து வருகை தந்த நபர்கள் தாமாக முன்வந்து தங்களது விவரங்களை தெரிவிக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள சோதனை சாவடிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அரசு தெரிவித்துள்ள விதிமுறைகளை பின்பற்றாமல் பொதுமக்கள் செயல்பட்டால் மீண்டும் கொரோனா தொற்று நோய் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் பணியாளர்கள் தொடர்ந்து தங்களது பணிகளை சிறப்பாக மேற்கொண்டு கொரோனா இல்லாத மாவட்டம் என்ற நிலையை உருவாக்க முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story