ஊரடங்கு தளர்வு: பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன; சாலைகளில் மக்கள் நடமாட்டம் அதிகரிப்பு


ஊரடங்கு தளர்வு: பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன; சாலைகளில் மக்கள் நடமாட்டம் அதிகரிப்பு
x
தினத்தந்தி 6 May 2020 11:45 PM GMT (Updated: 6 May 2020 7:56 PM GMT)

திருப்பூர் மாவட்டத்தில் ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டுள்ளதால் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன. சாலைகளில் மக்கள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.

திருப்பூர், 

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு வருகிற 17-ந்தேதி வரை அமலில் உள்ளது.இருப்பினும் கலெக்டரின் உத்தரவுப்படி ஊரடங்கில் சில தளர்வுகள் நேற்று முதல் திருப்பூர் மாவட்டம் முழுவதும் அமல்படுத்தப்பட்டது. ஊரக பகுதிகளில் உள்ள தனிக்கடைகள் பெரும்பாலும் திறக்கப்பட்டன.நகர்ப்புறங்களில் படிப்படியாக கடைகள் திறக்கப்பட்டன. அச்சகங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டன.

கட்டுமான பணிகளுக்கு தேவையான ஹார்டுவேர், சிமெண்ட், கட்டுமான பொருட்கள், சானிடரிவேர், மின்சாதன விற்பனை கடைகள் நேற்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்து இருந்தன. அதுபோல் செல்போன், கணினி, வீட்டு உபயோக பொருட்கள், மின்மோட்டார் பழுது நீக்கும் கடைகள், கண் கண்ணாடி விற்பனை மற்றும் பழுதுநீக்கும் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட்டன.

உணவகங்கள் காலை 6 மணி முதல் திறக்கப்பட்டன. பார்சல் மட்டும் உணவகங்களில் வழங்கப்பட்டது. இரவு 9 மணி வரை செயல்பட்டன. நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதியில் உள்ள வணிக வளாகங்களை தவிர்த்து தனிக்கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட்டன.

ஊரடங்கு காலத்தில் கடைகள் எதுவும் திறக்காததால் வீட்டு உபயோக பொருட்கள் பெரும்பாலும் பழுதடைந்தன. இதனால் நேற்று வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. புதிதாக பொருட்களை மக்கள் வாங்கி சென்றார்கள். அந்தந்த கடைகளில் சமூக இடைவெளி விட்டு வாடிக்கையாளர்கள் செல்வதற்கு வசதி செய்யப்பட்டு இருந்தது. செல்போன் மொத்த விற்பனை கடைகளில் மக்கள் அதிகளவில் காணப்பட்டனர். கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஜெராக்ஸ் கடைகள் திறந்து இருந்தன.

இதுபோல் மின்சாதனங்கள் பழுதுபார்க்கும் கடைகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. குறிப்பாக குக்கர், மின்விசிறி, மிக்சி, கிரைண்டர், டி.வி. ஆகியவற்றை பழுதுபார்க்க அதிக அளவில் மக்கள் கடைகளுக்கு வந்திருந்ததை காண முடிந்தது. மாநகர சாலைகளில் வாகன போக்குவரத்தும் அதிகரித்து காணப்பட்டன. முக்கிய சாலை சந்திப்புகளில் போக்குவரத்து போலீசார் பணியமர்த்தப்பட்டு வாகன நெரிசலை ஒழுங்குபடுத்தினார்கள். மளிகை, காய்கறி கடைகள் காலை முதல் மாலை வரை செயல்பட்டன.

இதுநாள் வரை ஊரடங்கி இருந்த திருப்பூர் நேற்று இயல்பு நிலைக்கு திரும்பியது. வாகன போக்குவரத்து, மக்கள் நடமாட்டத்துடன் பரபரப்பாக திருப்பூர் மாநகரம் காணப்பட்டது. மாவட்டம் முழுவதும் நேற்று பெரும்பாலான கடைகள் திறந்து இருந்தன. சாலைகளில் மக்கள் நடமாட்டம் அதிகமாகவே இருந்தது.

Next Story