மாவட்டத்தில் 168 டாஸ்மாக் கடைகள் இன்று திறப்பு: கூட்டத்தை கட்டுப்படுத்த தடுப்புகள் அமைப்பு
நாமக்கல் மாவட்டத்தில் இன்று 168 டாஸ்மாக் கடைகளை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதையொட்டி கூட்டத்தை கட்டுப்படுத்த சில கடைகளின் முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. இதையொட்டி தமிழக அரசின் உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் உள்ள 188 டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. இதனால் மதுப்பிரியர்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். சிலர் சாராயம் காய்ச்சி குடிக்க தொடங்கினர். சிலர் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சாராயம் விற்பனை செய்யவும் தொடங்கினர். அவர்களை கண்டறிந்து மதுவிலக்கு போலீசார் கைது செய்து வந்தனர்.
இந்த நிலையில் தமிழக அரசு இன்று (வியாழக்கிழமை) முதல் டாஸ்மாக் கடைகளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி அளித்து உள்ளது. எனவே பாதுகாப்பு கருதி டாஸ்மாக் கடைகளில் இருந்து குடோனுக்கு கொண்டு செல்லப்பட்ட மதுபான பாட்டில்கள் நேற்று மீண்டும் கடைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.
டாஸ்மாக் கடைகளுக்கு வரும் நபர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி இருப்பதால் நாமக்கல் நகரில் சில கடைகள் முன்பு கூட்டத்தை கட்டுப்படுத்த தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. சில கடைகள் முன்பு வட்டம் போடப்பட்டு உள்ளது. விற்பனையை தொடங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் செய்து வருகின்றனர்.
இதற்கிடையே கொரோனா நோய் கட்டுப்பாட்டு மண்டலத்தில் உள்ள கடைகளை திறக்க கூடாது என தமிழக அரசு அறிவித்து உள்ளது. அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல்லில் உள்ள திருச்சி சாலை, சேந்தமங்கலம் சாலை, சேலம் சாலை ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் மினிபஸ் நிலையம், கொசவம்பட்டி, களங்காணி, பொத்தனூர், வெண்ணந்தூர், பிள்ளாநல்லூர் மற்றும் காளப்பநாயக்கன்பட்டியில் உள்ள தலா 2 கடைகள், மணப்பள்ளி, ராசிபுரம் குமாரசாமி செட்டித்தெரு, எலந்தகுட்டை, கொக்கராயன்பேட்டை, பாலநாயக்கன்பாளையம், காட்டுவலசு, நவணி, நாமகிரிப்பேட்டை பகுதிகளில் உள்ள மொத்தம் 20 டாஸ்மாக் கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள 168 கடைகளையும் இன்று முதல் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளியை மதுபானம் வாங்க வருவோர் மீறாமல் இருக்க அங்கு பாதுகாப்பு பலத்தப்படுத்தப்பட உள்ளது. இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு கூறியதாவது:-
மதுபான பிரியர்களுக்கு வயது அடிப்படையில் நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதால் வயதை உறுதி செய்ய குடிமகன்கள் ஆதார் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஏதாவது ஒரு அடையாள அட்டையுடன் வர வேண்டும். கண்டிப்பாக முக கவசம் அணிந்து இருக்க வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மீறினால் மதுபானம் வழங்கப்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story