விளாப்பாக்கம் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் - விவசாயிகள் பயன்பெற கலெக்டர் வேண்டுகோள்
விளாப்பாக்கம் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் பயன்பெற வேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.,
திருவள்ளூர் மாவட்டத்தில் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் நலன் கருதி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் நேரடி நெல் கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் விவசாயிகள் விரும்பியவாறு சிரமம் இல்லாமல் தங்களுடைய விலை பொருட்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு நல்ல முறையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
இதைத்தொடர்ந்து, இதுநாள் வரையில் 11 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 11 ஆயிரத்து 156 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு 1,284 விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர்.
இந்தநிலையில், விவசாயிகளிடமிருந்து நடப்பு பருவத்தில் கூடுதலாக 10 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக தற்போது புதியதாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விளாப்பாக்கம் கிராமத்தில் மேலும் ஒரு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் அனைவரும் நிலவிவரும் ஊரடங்கு காலத்தில் எந்தவித சிரமமும் இன்றி எந்த நேரத்திலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அணுகும் போது தவறாமல் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.
இது தொடர்பான சந்தேகங்களுக்கு சம்பந்தப்பட்ட வேளாண் உதவி இயக்குனர்களை தொடர்பு கொண்டு விவசாயிகள் பயன்பெறலாம்
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story