தமிழகத்தில் உள்ள அனைத்து கிடங்குகளிலும் 100 சதவீதம் அரிசி இருப்பு வைக்கப்பட்டுள்ளது அமைச்சர் காமராஜ் பேட்டி


தமிழகத்தில் உள்ள அனைத்து கிடங்குகளிலும் 100 சதவீதம் அரிசி இருப்பு வைக்கப்பட்டுள்ளது அமைச்சர் காமராஜ் பேட்டி
x
தினத்தந்தி 6 May 2020 10:24 PM GMT (Updated: 6 May 2020 10:24 PM GMT)

தமிழகத்தில் உள்ள அனைத்து கிடங்குகளிலும் 100 சதவீதம் அரிசி இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் காமராஜ் கூறினார்.

திருவாரூர், 

தமிழகத்தில் உள்ள அனைத்து கிடங்குகளிலும் 100 சதவீதம் அரிசி இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் காமராஜ் கூறினார்.

கூடுதல் அரிசி வழங்கும் திட்டம்

திருவாரூர் ஒன்றியம் அலிவலம் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசியுடன், நபர் ஒருவருக்கு தலா 5 கிலோ வீதம் கூடுதல் அரிசி வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஆனந்த் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் காமராஜ் கலந்துகொண்டு இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் கமல் கிஷோர், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ஜெயராமன், உதவி கலெக்டர் ஜெயபிரீத்தா, கூட்டுறவு சங்க தலைவர்கள் மணிகண்டன், கலியபெருமாள், அலிவலம் ரவி, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாளர் திவாகரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பன்னீர்செல்வம், ஊராட்சி மன்ற தலைவர் நிர்மலா பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் காமராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இரண்டு மடங்கு அரிசி

ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ரூ.1,000 நிவாரணம் மற்றும் அரிசி, சர்க்கரை, பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியவை விலையில்லாமல் ஏப்ரல் மாதம் வழங்கப்பட்டது. பின்னர் ஊரடங்கு நீட்டிப்பு வந்தவுடன் மே மாதத்திற்கு விலையில்லாமல் வழங்கப்படும் என அறிவித்து கடந்த 4-ந் தேதி முதல் கொடுக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு சார்பில் முன்னுரிமை உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு நபருக்கு 5 கிலோ வீதம் 5.36 லட்சம் மெட்ரிக் டன் அரிசியை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் தமிழக அரசு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அரிசி வழங்க வேண்டும் என முடிவு எடுத்தது. இதற்காக ரூ.432 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ரூ.22-க்கு மத்திய அரசின் தொகுப்பில் இருந்து 2 லட்சம் மெட்ரிக் டன் அரிசி கொள்முதல் செய்து அனைவருக்கும் இரண்டு மடங்கு அரிசியை வழங்கி வருகிறது. விவசாய பணிகளுக்கு முழு தளர்வு வழங்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் அதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

100 சதவீதம் அரிசி இருப்பு

தமிழகத்தில் மே மாதத்திற்குரிய ரேஷன் பொருட்கள் கடந்த 2 நாட்களில் 30 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து கிடங்குகளிலும் 100 சதவீதம் அரிசி இருப்பு வைக்கப்பட்டுள்ளது. 85 சதவீத பொருட்கள் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் சென்றடைந்து விட்டது.

கொரோனாவை தடுப்பதற்கு குழுக்கள் அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் அரசு அனைத்து தரப்பினரும் பாராட்டையும் பெற்று வருகிறது. மற்ற மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story