காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஒரே நாளில் 45 பேருக்கு கொரோனா உறுதி


காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஒரே நாளில் 45 பேருக்கு கொரோனா உறுதி
x
தினத்தந்தி 6 May 2020 10:45 PM GMT (Updated: 6 May 2020 10:29 PM GMT)

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

காஞ்சீபுரம்,

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகள் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைதொடர்ந்து மார்க்கெட் தற்காலிகமாக மூடப்பட்டு, காய்கறி வியாபாரிகள் அந்தந்த ஊருக்கு திரும்பி சென்றனர். இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரம் செய்து விட்டு திரும்பியவர்களின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, அதற்கான முடிவு நேற்று வெளியானது. இதில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஒரேநாளில் மொத்தம் 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதன்படி காஞ்சீபுரம் தாலுகாவில் சின்ன காஞ்சீபுரம், திருக்காளிமேடு பகுதிகளை சேர்ந்த கோயம்பேடு வியாபாரிகள் 12 பேர், இவர்களுடன் தொடர்பில் இருந்த 4 பெண்கள், 3 ஆண்கள் என 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. வாலாஜாபாத் தாலுகாவில் கோயம்பேடு மார்க்கெட் வியாபாரி ஒருவருக்கும், உத்திரமேரூர் தாலுக்காவில் பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்ட பெருநகர் பகுதியை சேர்ந்த ஏற்கனவே கொரேனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 7 வயது சிறுமி மற்றும் பெண் ஆகிய 2 பேருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குன்றத்தூர்

ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் ஸ்ரீபெரும்புதூர் டவுன் பஞ்சாயத்து பகுதியை சேர்ந்த மார்க்கெட் வியாபாரிகள் 5 பேர், பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவித்த திருமங்கலத்தில் 6 வயது சிறுவன் என 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

குன்றத்தூர் பகுதியில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அந்த பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஆண்டாங்குப்பம் பகுதியை சேர்ந்த 3 பேர் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சென்ற காய்கறிகளை வாங்கி வீடு வீடாக சென்று விற்பனை செய்தனர். இவர்கள் 3 பேருக்கும் நேற்று கொரோனா உறுதியானது.

இது தவிர காய்கறி வாங்க கடைக்கு சென்று வந்த குன்றத்தூர், வெங்கடாபுரத்தை சேர்ந்த 45 வயதுடைய நபர், கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி வாங்கி வந்த மாங்காடு பகுதியைச் சேர்ந்த 2 பேர், அய்யப்பன்தாங்கலை சேர்ந்த ஒருவரும் கொரோனாவால் பாதிக் கப்பட்டனர்.

படப்பை

குன்றத்தூர் ஒன்றியம் மேல் படப்பை பகுதியை சேர்ந்த 35 வயது வாலிபர் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் மேலாளராக உள்ளார். அவருக்கு நேற்று கொரோனா உறுதியானது. காய்கறி விற்பனை செய்பவர்களான படப்பையை சேர்ந்த 3 பேரும், படப்பை அம்மணம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரும், படப்பை அடுத்த மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்த 66 வயது காய்கறி வியாபாரி, நடுவீரப்பட்டு பகுதியை சேர்ந்த 34 வயது காய்கறி வியாபாரி, வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய காய்கறி வியாபாரி ஆகிய 8 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானதால் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்கள் உள்பட காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 11 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். ஒருவர் உயிரிழந்து விட்டார். மீதம் உள்ள 75 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story