சென்னை கோயம்பேட்டில் இருந்து வந்த பெண்ணின் கணவர் உள்பட மேலும் 5 பேருக்கு கொரோனா


சென்னை கோயம்பேட்டில் இருந்து வந்த பெண்ணின் கணவர் உள்பட மேலும் 5 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 6 May 2020 10:30 PM GMT (Updated: 6 May 2020 10:30 PM GMT)

சென்னை கோயம்பேட்டில் இருந்து வந்த பெண்ணை தொடர்ந்து அவருடைய கணவர் உள்பட மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தஞ்சாவூர், 

சென்னை கோயம்பேட்டில் இருந்து வந்த பெண்ணை தொடர்ந்து அவருடைய கணவர் உள்பட மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது தஞ்சை மாவட்டத்தில் 20 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

58 பேர் பாதிப்பு

தஞ்சை மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 58 ஆக இருந்தது. இவர்களில் 43 பேர் குணம் அடைந்து வெவ்வேறு நாட்களில் அவரவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பிரிவில் 15 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் சென்னையில் இருந்து வருபவர்களை மாவட்ட எல்லைகளில் போலீசார், சுகாதாரத்துறையினர், வருவாய்த்துறையினர் தடுத்து நிறுத்தி பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வருகின்றனர்.

சென்னையில் இருந்து வந்தவர்கள்

சென்னை கோயம்பேடு பகுதியில் இருந்து வந்தவர்கள் தஞ்சை பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் தனிமைப்படுத்தி தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஏற்கனவே பாபநாசம் தாலுகா அதியம்பநல்லூரை சேர்ந்த 28 வயது பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது.

தற்போது அந்த பெண்ணின் 31 வயதுடைய கணவர், அதே ஊரை சேர்ந்த 25 வயது ஆண், 20 வயது ஆண், திருவாரூர் மாவட்டம் குடவாசலை சேர்ந்த 21 வயது ஆண், பேராவூரணி அருகே உள்ள களத்தூர் கிராமத்தை சேர்ந்த 35 வயது ஆண் ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.

20 பேர் சிகிச்சை

இதனால் தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் விடுவிக்கப்பட்ட 43 பேரை தவிர, தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை பிரிவில் தற்போது 20 பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story